விவசாயிகளை பாதித்தால் அ.தி.மு.க. ஆதரிக்காது - முதலமைச்சர் திட்டவட்டம்

Sep 22, 2020 08:44 PM 2017

விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அ.தி.மு.க. அரசு ஆதரிக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், வேளாண் மசோதாக்களில் பாதுகாக்கப்பட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அ.தி.மு.க. அரசு ஆதரிக்காது என்று உறுதிபட தெரிவித்தார். தான் ஒரு விவசாயி என்றுக் கூறிக்கொள்வதில் பெருமைப்படுவதாகவும், விவசாயியின் நலனையே தான் விரும்புவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

மீத்தேன் திட்டத்திற்கு தி.மு.க. தான் காரணம் என்றுக் கூறிய முதலமைச்சர், ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது என்றும், விவசாயிகளின் நலனில் அவர்களுக்கு அக்கறை இல்லை என்றும் குற்றம்சாட்டினார். அ.தி.மு.க. நிறைவான ஆட்சியை கொடுத்து வருவதால், அதை பொறுத்துக் கொள்ள முடியாமல், வேண்டுமென்றே அரசின் மீது பல்வேறு பழிச்சொல்லை ஸ்டாலின் கூறி வருவதாக தெரிவித்தார்.

மேலும், 14,000 கோடி ரூபாய் மதிப்பில் காவிரி - குண்டாறு திட்டம் அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்குள் செயல்படுத்தப்படும் எனக் கூறிய முதலமைச்சர், சிறப்பான ஆட்சியால் அதிமுகவின் கொடி நிலையாக பறக்கும் எனக் குறிப்பிட்டார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து திட்டத்தால், நீர் நிலைகள் நிரம்பி வழிவதாக கூறிய முதலமைச்சர், அடுத்த நான்கு ஆண்டுகளில் இராமநாதபுரம் பசுமையான பகுதியாக மாறும் எனக் குறிப்பிட்டார்.

Comment

Successfully posted