2 கட்ட தேர்தலை எதிர்த்து அதிமுக வழக்கு

Sep 17, 2021 09:25 PM 779

ஊரக உள்ளாட்சி தேர்தலை, 2 கட்டமாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், கடந்த 13ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், 2 கட்டங்களாக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் இன்பதுரை, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மாநிலம் முழுவதும் அல்லாமல், 9 மாவட்டங்களுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படுவதால், 2 கட்டங்களாக தேர்தல் நடத்த எந்த காரணமும் இல்லை எனவும், தேர்தலை 2 கட்டங்களாக நடத்துவதால், கள்ள ஒட்டு போடுவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வாய்ப்பாக அமையும் என தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் எப்படியாவது ஜெயிக்க வேண்டுமென்ற நோக்கில் ஆளும் கட்சி, ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் என்பதால், தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கவும், கொரோனா விதிகளை அமல்படுத்த வலியுறுத்தியும், அதிமுகவின் இணை ஒருஙகிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 14ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய திமுக ஆட்சி காலத்தில் 2006ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள இன்பதுரை, தற்போது 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவதால் மீண்டும் வன்முறை வெடிக்க வாய்ப்பு இருப்பதால், எதிர்கட்சி தலைவரின் கோரிக்கை மனுவை மாநில தேர்தல் ஆணையம் பரிசீலிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற தகுந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டுமெனவும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.  

 

Comment

Successfully posted