`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...

Jan 06, 2021 07:57 AM 21978

தமிழ்த் திரை இசையை உலகெங்கும் கொண்டு சேர்த்தது மட்டுமில்லாமல், தேசிய விருது முதல் ஆஸ்கர் விருது வரை தனது கைகளில் ஏந்தி, சர்வதேச அரங்கில் தமிழர்களை தலை நிமிரச் செய்திட்ட ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் இன்று. அவரைப் பற்றிய சிறு செய்தித் தொகுப்பை காணலாம்.

1966 ஆம் ஆண்டு பிறந்த ஏ.ஆர்.ரஹ்மான், அவரது ஆரம்ப காலங்களில் சுமார் 500 படங்களுக்கும் மேல் இளையராஜாவிடம் உதவியாளராக பணியாற்றினார். அதன் பின்னர் சில வருடங்கள் விளம்பரங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் இயக்கிய ரோஜா மூலம், திரைப்படங்களுக்கும் இசையமைக்க ஆரம்பித்தார்.

ரோஜா படத்தின் இசை ரஹ்மானுக்கு யாருமே எதிர்பார்க்காத மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. அதுவரை அப்படியொரு துல்லியமான இசையை கேட்டிடாத இசை ரசிகர்கள் அவரை கொண்டாடத் துவங்கினர். மேலும் முதல் படமான ரோஜாவிலேயே அவருக்கு தேசிய விருதும் கிடத்தது.

அதன் பின்னர் தமிழ்த் திரையுலகு மட்டுமின்றி, இந்தி, ஹாலிவுட் என சர்வதேச எல்லைகளிலும் தடம் பதிக்கத் துவங்கினார் ரஹ்மான். இதனிடையே அவர் வெளியிட்ட வந்தே மாதரம் என்ற இசைத் தொகுப்பு அவரை புகழின் உச்சத்துக்கே கொண்டுச் சேர்த்தது. மேலும், பாம்பே ட்ரீம்ஸ் என்ற மேடை நாடகம் என இசைத் துறையின் அத்தனை தடங்களிலும் தனது திறமைகளை அழுத்தமாக பதிவு செய்தார் ரஹ்மான்.

ரோஜாவுக்கு கிடைத்த தேசிய விருது முதல், இதுவரை ரஹ்மான் பெற்ற விருதுகளின் பட்டியல் பெரிதிலும் பெரிது. 6 தேசிய விருதுகள், 32 பிலிம்பேர் விருதுகள், 11 ஐஐஎஃப்ஏ (IIFA)விருதுகள், 2 ஆஸ்கர் விருதுகள், பாப்தா, கிராமி விருதுகள் என சர்வதேச அளவில் இசைக்காக வழங்கப்படும் அனைத்து விருதுகளையும் பெற்ற இசையமைப்பாளராக விளங்குகிறார் ரஹ்மான்.

ரஹ்மானின் இசைக்காகவே திரையரங்குகளில் ஓடிய படங்களின் ஏராளமானவை. பாடல்கள், பின்னணி இசை என, மேடை நிகழ்ச்சிகள் என அனைத்திலும் பல புதுமைகள் பிரமாண்டங்களை கொடுத்து ரசிகர்களுக்கு இசை விருந்து படைத்த ரஹ்மான், சன் சைன் ஆர்க்கெஸ்ட்ரா மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இசைப் பயிற்சியும் அளித்து வருகிறார்.

ரஹ்மானால் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னணி பாடகர்கள் முதல், அவரது இசைப் பள்ளியில் பயின்று சாதனை படைத்த லிடியன் நாதஸ்வரம் வரை, இசைத்துறைக்கு அளவில்லா பங்களிப்பு செய்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நியூஸ் ஜெ தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.

 

Comment

Successfully posted