”ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை தேவை” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Jan 21, 2022 03:14 PM 1167

தமிழக மக்களுக்கு தரம் குறைந்த பொங்கல் தொகுப்பு பொருட்களை வழங்கி, ஊழலில் திளைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பொங்கல் தொகுப்பு ஊழல் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரடியாகக் கேட்கும் கேள்விகளுக்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பிதற்றி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மூன்றாம் தர அரசியல்வாதி போல் நாகரிகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அமைச்சர் சக்கரபாணி அறிக்கை வெளியிட்டிருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுகளில் அண்ணா திமுக ஆட்சியின்போது, பணக்கொடையுடன் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுப் பொருட்களைப் பற்றியோ, அதன் தரம்பற்றியோ யாரும் எவ்வித புகாரும் அளிக்கவில்லை என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

image

விடியா அரசின் பொங்கல் தொகுப்பில் 15 முதல் 18 பொருட்கள் வழங்கப்பட்டதாகவும், பொருட்களில் எடை குறைவு, அரிசியில் புழு, கோதுமை மாவில் வண்டு என்று சமூக வலைதலங்களிலும் தொலைக்காட்சிகளிலும் குறைகள் கூறப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் மீதோ, இதற்கு காரணமானவர்கள் மீதோ நடவடிக்கை எடுக்காத விடியா அரசு, புகார் கூறும் பொதுமக்கள் மீது ஏவல்துறை மூலம் நடவடிக்கை எடுப்பது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் பல கோடி ரூபாய் கமிஷன் பெற்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

Comment

Successfully posted