அமர்நாத் யாத்திரையும்......தீவிரவாத தாக்குதல்களும்

Aug 03, 2019 03:14 PM 467

காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஊடுருவல் காரணமாக, 2ஆம் தேதி முதல் அமர்நாத் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் சுமார் 3,880 மீட்டர் உயரத்தில் அமைத்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் இயற்கையாகவே பனிலிங்கம் தோன்றுகின்றது. இதனை தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் யாத்திரை செல்கின்றனர். இதுவே அமர்நாத் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. இந்துக்களின் முக்கிய யாத்திரைகளில் ஒன்றாக அமர்நாத் யாத்திரை உள்ளது. நிகழாண்டில் கடந்த ஜூன் 30ஆம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 15ம் தேதி ஷ்ரவன் பூர்ணிமாவுடன் நிறைவடைகிறது.

இந்தநிலையில், காஷ்மீருக்கு அமர்நாத் யாத்திரைக்காக வந்துள்ள பக்தர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதால், அமர்நாத் யாத்திரை பக்தர்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என ஜம்மு காஷ்மீர் மாநில உள்துறை அமைச்சகம் ஆகஸ்ட் 2ம் தேதி அறிவித்தது. இந்த அறிவிப்பின் பின்னாக கடந்த கால கசப்பு அனுபவங்கள் உள்ளன.

கடந்த 2000ஆம் ஆண்டு ஆகஸ்டு 1ம் தேதி பாகிஸ்தான் ஆதரவுத் தீவிரவாதிகள் அமர்நாத் யாத்திரீகர்களைக் குறிவைத்து முதன்முறையாகத் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 30 பேர் பலியாகினர்.

2016 ஜூலையில் காஷ்மீரில் பயங்கரவாதி வானி சுட்டுக் கொல்லப்பட்டார். அதனால் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். அப்போது அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட, லட்சக்கணக்கான பக்தர்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகினர்.

2017 ஜுலையில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தியதில் 6 பெண்கள் உள்ளிட்ட 7 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர். 19 பேர் படுகாயமடைந்தனர். இந்த அனைத்து தாக்குதல்களையும் தாண்டி, உயிரைப் பணயம் வைத்தே யாத்ரீகர்கள் அமர்நாத்திற்கு யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறிய தாக்குதலை நடத்தியது. அதற்கு இந்திய ராணுவம் சரியான பதிலடியையும் கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக தான் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அமர்நாத்தை குறி வைத்திருப்பதாகப் பார்க்கப்படுகிறது.

பெண்கள், முதியவர்கள், எளிய மக்கள் செல்லும் அமர்நாத் யாத்திரை நல்ல முறையில் நிறைவடைய வேண்டும் என்பதுதான் இந்தியர்கள் அனைவரின் எதிர்பார்ப்பும்.

Comment

Successfully posted