தொழில்நுட்பத்தில் மற்றொரு மைல்கல்.. ஹைப்பர்சானிக் என்ஜின் சோதனை வெற்றி!

Sep 07, 2020 09:18 PM 1421

ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு அதிக வேகத்தில் செல்லக்கூடிய ஹைப்பர்சானிக் மாதிரி ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது

ஒடிசா மாநிலத்தின் அப்துல்கலாம் தீவிலிருந்து HYPERSONIC DEMONSTRATOR VEHICLE எனப்படும் என்ஜினை இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக பரிசோதித்தனர். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட HYPERSONIC DEMONSTRATOR VEHICLE ஆனது, அக்னி ஏவுகணையின் பூஸ்டர்களுடன் பொருத்தி விண்ணில் செலுத்தப்பட்டது. 30 கிலோமீட்டர் தூரத்தை ராக்கெட் அடைந்தவுடன், பூஸ்டர்கள் பிரிந்து ஹைப்பர்சானிக் என்ஜின் வெற்றிகரமாக செயல்படத் துவங்கியது. என்ஜின் செயல்படத் துவங்கிய 20 செகண்டுகளில், அதன் வேகம் மேக் நம்பர் 6 அதாவது மணிக்கு 4 ஆயிரம் கிலோமீட்டர் என்ற வேகத்தை தொட்டது. இதன்மூலம் ஹைப்பர்சோனிக் என்ஜினை வெற்றிகரமாக பரிசோதித்த 4வது நாடு என்ற பெருமையை இந்தியா எட்டியுள்ளது. இதற்குமுன் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் இத்தகைய சோதனையை மேற்கொண்டுள்ளன. இந்த சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திய டி ஆர்டிஓவிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது பிரதமர் மோடியின் தற்சார்பு இந்தியா திட்டத்தின் மைல்கல் எனவும் குறிப்பிட்டுள்ளார். 5 வருடங்களில் ஹைப்பர்சானிக் ஏவுகணை தயாரிப்பில் வெற்றி பெறுவோம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

 

Comment

Successfully posted