அகழ்வாய்வு பொருட்களை மத்திய தொல்லியல் துறையிடம் வழங்க கூடாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Oct 12, 2018 03:11 AM 1130

கீழடியில் அகழ்வாய்வு செய்யப்பட்ட பொருட்களை மத்திய தொல்லியல் துறையிடம் வழங்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கீழடி அகழ்வாய்வு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் கனிமொழிமதி, பிரபாகர் பாண்டியன் உள்ளிட்டோர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள், சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக தமிழக அரசும், தொல்லியல் துறையும் பதில் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இதில் வழக்கறிஞர் பிரபாகர் பாண்டியன் மனு மீது பிறப்பித்த உத்தரவில் ,கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை மத்திய தொல்லியில் துறையிடம் கொடுக்கக் கூடாது என கூறியுள்ளனர்.

அகழாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட எந்தப் பொருளையும் பெங்களூர் தொல்லியல் துறை கண்காணிப்பாளரிடம் தரக் கூடாது என்றும்
கொடுத்தே ஆக வேண்டும் என்றால், தமிழக தொல்லியல் துறை ஆணையரிடம் ஒப்படைக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளனர்.

கீழடி முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழாய்வு தொடர்பான, அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை அக்டோபர் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து வழக்கு விசாரணை அக்டோபர் 31 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted