தென்சென்னையின் பல பகுதிகளில் கைவரிசை காட்டிய கும்பல் கைது!!

Jul 04, 2020 05:47 PM 698

தென் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கைவரிசை காட்டிவந்த கொள்ளை கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பரங்கிமலை, சேலையூர், பீர்கங்கரணை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. அனைத்து வீடுகளிலும் அதிகாலை நேரத்தில் கொள்ளையடிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் காவல்நிலையங்களில் புகார் அளித்தனர். இதையடுத்து தனிப்படை அமைத்த போலீசார் கொள்ளை கும்பலை குறிவைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனாலும், அவர்கள் சிக்காமல் இருந்தனர்.

சில மாதங்களுக்கு முன், முடிச்சூரில் நடந்த கொள்ளை சம்பவம் ஒன்றில், கொள்ளையர்களின் உருவம், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கொள்ளையர்களில் ஒருவர் பெரும்பாக்கத்தை சேர்ந்த குகன் என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், பீர்க்கங்காரணை பகுதியில், மூன்று வீடுகளிலும், சேலையூர் மற்றும் தாம்பரம் பகுதிகளில், இரண்டு வீடுகளிலும், கொள்ளை அடித்ததாக வாக்குமூலம் அளித்தார். அவருடன் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த, பாருக், சதீஷ் என்கிற குப்புசாமி, துரைபாக்கம் பகுதியை சேர்ந்த பிரகாஷ், சூர்யா ஆகியோரும் சேர்ந்து வீடுகளில் கைவரிசை காட்டியதும் தெரியவந்தது.

ஐந்து பேர் கொண்ட இந்த கொள்ளை கும்பல் இருசக்கர சக்கர வாகனங்களில் இரவு நேரத்தில் வீடுகளை நோட்டம் விடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். குறிப்பிட்ட வீட்டை தேர்வு செய்யும் இவர்கள் அதிகாலை வரை காத்திருந்து பூட்டை உடைத்தோ அல்லது மொட்டை மாடி வழியாக வீடுகளுக்குள் நுழைந்து நகை, பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துள்ளனர். அவர்களிடம் இருந்து 41 சவரன் நகைகள், 2 கிலோ வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைதானவர்களில் ஒருவர் சிறுவன் என்பதால் சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார். மீதம் இருந்த 4 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர் கொள்ளை சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் மற்றும் கைரேகை தடயங்களை வைத்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாரை சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டியுள்ளார்.

Comment

Successfully posted