"என்ன சொல்ல போகிறாய்" - திரை விமர்சனம்

Jan 13, 2022 10:23 PM 9384

அஸ்வின் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ‘என்ன சொல்ல போகிறாய்’ பொங்கல் ரேஸில் இணைந்துள்ளது. ஹரிஹரன் இயக்கியுள்ள இந்தப் படத்தை ட்ரைடன் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ளார். காதலர்களுக்கான அத்தனை அம்சங்களுடன் பேண்டஸியான படமா வெளியாகிருக்கு ‘என்ன சொல்ல போகிறாய்.’

ரேடியோ ஜாக்கியாக விக்ரம் பாத்திரத்தில் அஸ்வின், காதல் கதைகளை மட்டுமே எழுதும் எழுத்தாளர் என்ற அஞ்சலி பாத்திரத்தில் அவந்திகா மிஷ்ரா, இன்னொருபக்கம் ப்ரீத்தியாக தேஜு அஷ்வினி.

அஸ்வினுக்கும் அவந்திகாவுக்கும் திருமணம் நிச்சயமாக, அவர்களது கற்பனைக்குள் அஸ்வினின் முன்னாள் காதலியாக எண்ட்ரி கொடுக்கிறார் தேஜு அஷ்வினி.

இதனால் அவந்திகா - அஸ்வின் - தேஜு அஷ்வினி என இப்படியொரு எதிர்பாராத முக்கோண காதல் கதைக்களத்திற்குள் திரைக்கதை செல்கிறது. இறுதியில் அஸ்வின் யாருக்குச் சொந்தமானார் என்பதே ‘என்ன சொல்ல போகிறாய்.’

தமிழில் அதிகம் பார்த்துப் பழகிய கதை தான் என்றாலும், இந்தப் படம் இளைஞர்களை ரசிக்க வைப்பதற்காக கொஞ்சம் கலர்ஃபுல்லாக உருவாகிருக்குன்னு சொல்லலாம். ஆனாலும், அடுத்தடுத்தக் காட்சிகளை எளிதாக யூகிக்க முடிவதும், படத்தின் நீளமும் கொஞ்சம் அயர்ச்சியைத் தருகிறது.

கதை மொத்தமும் அஸ்வினை சுற்றியே நகர்கிறது, அதை உணர்ந்து அவரும் பெர்ஃபாமன்ஸ் செய்திருக்கிறார், சில காட்சிகளில் ‘ரோஜாக்கூட்டம்’ ஹீரோ ஸ்ரீகாந்தைப் போல ரொமான்ஸ் பண்ணவும் முயற்சித்துள்ளார்.

தேஜு அஷ்வினி கேரக்டரும் அவரது நடிப்பும் நல்ல அழுத்தமாக இருக்கின்றன. அதேபோல் அஞ்சலியாக வரும் அவந்திகாவும் ரசிகர்களின் அனுதாபத்தை மொத்தமாக அள்ளிச் செல்கிறார்.

புகழின் காமெடி படத்திற்கு எந்தவிதத்திலும் பலமாக இல்லை, மாறாக கதையின் வேகத்தையும், ரசிகர்களின் பொறுமையையும் ரொம்பவே சோதிக்கின்றன.

சுப்பு பஞ்சு, டெல்லி கணேஷ் பாத்திரங்கள் படத்தில் ஓரளவு ஒர்க் அவுட் ஆகியுள்ளன. கதையிலும் திரைக்கதையிலும் இயக்குநர் ஹரிஹரன் இன்னும் புதிதாக முயற்சித்திருக்கலாம்.

ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவும், விவேக் - மெர்வின் ஆகியோரின் பின்னணி இசையும் பேண்டஸி படத்திற்கான பங்களிப்பைச் செய்துள்ளன. ‘என்ன சொல்ல போகிறாய்’ ரசிகர்களை கொண்டாட வைக்கவில்லை என்றாலும், திண்டாட வைக்கும் அளவிற்கு இல்லை.

- அப்துல் ரஹ்மான்

Comment

Successfully posted