மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் அக்டோபர் 21ம் தேதி சட்டப்பேரவை தேர்தல்

Sep 21, 2019 03:04 PM 117

மகாராஷ்டிரா, அரியானா மாநிலச் சட்டப்பேரவைகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவை, 90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டப்பேரவை ஆகியவற்றின் பதவிக்காலம் நவம்பர் மாதம் முடிவடைய உள்ளது. இதனால் இரு மாநிலங்களின் சட்டப்பேரவைக்கும் ஒரே கட்டமாக அக்டோபர் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லியில் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, இதை அறிவித்தார். இரு மாநிலங்களிலும் வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 29 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்யக் கடைசி நாள் அக்டோபர் 4ஆம் தேதி. வேட்பு மனுக்கள் பரிசீலனை அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற அக்டோபர் 7ஆம் தேதி கடைசிநாளாகும். அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அக்டோபர் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 24ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படும். இருமாநிலப் பொதுத் தேர்தலைத் தவிர பீகாரின் சமஷ்டிப்பூர் மக்களவைத் தொகுதி, பல்வேறு மாநிலங்களில் உள்ள 64 சட்டமன்றத் தொகுதிகள் ஆகியவற்றுக்கும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

Comment

Successfully posted