வீடு புகுந்து எட்டரை லட்சம் ரூபாய் கொள்ளையடித்த காவல் உதவி ஆய்வாளர்

Jun 10, 2021 12:38 PM 1847

வேலூர் மாவட்டம் குரு மலையில் உள்ள நச்சுமேடு கிராமத்தில் சாராயம் காய்ச்ச்சப்படுவதாக வந்த தகவலையடுத்து, அரியூர் காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையில் 4 போலீசார் அப்பகுதிக்கு சென்றனர். சாராயம் இருப்பதாக கூறப்பட்ட இளங்கோ மற்றும் செல்வம் ஆகியோரின் வீடுகளுக்கு சென்றபோது, அவர்கள் வீட்டில் இல்லாததால், பீரோவை உடைத்து, எட்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 15 சவரன் தங்க நகைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றனர். தகவலறிந்து அவர்களை மடக்கிப்பிடித்த அப்பகுதி மக்கள், பணம் மற்றும் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். காவல்துறையினரின் கொள்ளை சம்பவத்தைக் கண்டித்து அப்பகுதி மக்கள் அரியூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதையடுத்து, பாகாயம் காவல் ஆய்வாளர் சுபா தலைமையில் இதுகுறித்து விசாரணை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, காவல்துறை உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் காவலர்கள் 2 பேர் மீது திருட்டு மற்றும் வீடு புகுந்து கொள்ளையடித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருட்டு வழக்கு பதியப்பட்டுள்ள 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comment

Successfully posted