சவுதி எண்ணெய் வயல்கள் மீது தாக்குதல்-சர்வதேச மற்றும் இந்திய சந்தைகள் சந்திக்க உள்ள தாக்கங்கள் என்ன?

Sep 17, 2019 07:51 AM 169

சவுதி நாட்டின் எண்ணெய் வயல்கள் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலால் அந்நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச மற்றும் இந்திய சந்தைகள் சந்திக்க உள்ள தாக்கங்கள் என்ன?

உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் 10 சதவிகிதம் சவுதியில் இருந்து கிடைக்கிறது. இந்தியா தனது ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவிகிதம் வரைக்கும் சவுதியையே நம்பி உள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக சவுதி உள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பிற்காக சவுதி அரேபிய அரசு ‘சவுதி அராம்கோ’ - என்ற பெரிய நிறுவனத்தை நடந்தி வருகின்றது. இதற்கு குராய்ஸ் என்ற இடத்தில் எண்ணெய் வயலும், அப்காய் என்ற இடத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும் உள்ளன. இந்த அப்காய் ஆலையே உலகின் மிகப் பெரிய சுத்திகரிப்பு ஆலை ஆகும்.

இவற்றைக் குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த சனிக் கிழமை காலையில் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்களை நடத்தினர். சுமார் 10 ஆளில்லா விமானங்கள் மூலம் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் சுமார் 50 லட்சம் பீப்பாய் அளவுக்கான எண்ணெய் எரிந்திருக்கலாம் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. அத்தோடு எண்ணெய் உற்பத்திக்கான பல கட்டுமானங்களும் சிதைந்து போயுள்ளன.

தாக்குதலை அடுத்து சவுதி அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘தாக்குதலுக்கு அஞ்ச மாட்டோம், எண்ணெய் ஏற்றுமதியைத் தொடர்வோம்’ - என்று கூறப்பட்டு இருந்தாலும், சவுதி எண்ணெய் வயல்கள் மீதான தாக்குதல்களால் அந்நாட்டின் எண்ணெய் உற்பத்தி பாதிக்கும் மேல் பாதிக்கப்பட்டு உள்ளது, இதனால் ஒவ்வொரு நாளும் சந்தை 57 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இழக்கின்றது. இந்த நிலை சரியாவதற்கு இன்னும் சில காலம் ஆகும்.

இதனால் தாக்குதல் நடந்த அடுத்த நாளான ஞாயிற்றுக் கிழமையே கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் உயர்ந்தது. சவுதியில் எண்ணெய் உற்பத்தி சீராகும் வரையில் இந்த விலை உயர்வுகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அமெரிக்க-சீன வர்த்தகப் போரால் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமந்தத்தால் ஏற்கனவே ஆட்டோமொபைல் துறை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கும் போது, கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலைகளும் உயர்ந்தால் அதுவும் பொருளாதாரத்தை பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.

Comment

Successfully posted