ராமர் கோயில் பூமி பூஜையை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டது அயோத்தி!

Aug 04, 2020 08:16 PM 661

அயோத்தியில் நாளை ராமர் கோயில் பூமிபூஜை நடைபெறும் நிலையில், அங்கு பல்வேறு யாகங்கள், பூஜைகள் நடைபெற்று வருகின்றன. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்துக்காக, நாளை பிற்பகல் 12.30 மணியளவில் பூமி பூஜை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, அயோத்தி விழாக்கோலம் பூண்டுள்ளது. திரும்பும் இடமெங்கும் சுவர்களில் ராமரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும், விழா நடைபெறும் இடத்துக்கு அனைத்து தெய்வங்களையும் வரவேற்கும் விதமாக ராமார்ச்சன் பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் பங்கேற்ற வேதவிற்பன்னர்கள், தெய்வங்களை வரவேற்கும் விதமாக வேதங்களை முழங்கினர்.

ராமர்கோயில் பூமி பூஜை விழாவுக்காக, பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் அயோத்திக்கு தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட செங்கற்கள் எடுத்து வரப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் சேலத்தை சேர்ந்த துறவிகள் சார்பில், 5 கிலோ எடை கொண்ட தங்க செங்கல், 20 கிலோ எடை கொண்ட வெள்ளி செங்கல் எடுத்து வரப்பட்டுள்ளது. அயோத்தி நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாத வகையில், முக்கிய வீதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அயோத்தி முழுவதும் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனிடையே பிரம்மாண்ட அயோத்தி கோயில் எவ்வாறு அமையப் போகிறது என்பதை விளக்கும் மாதிரி புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாகர் கட்டடக் கலை வடிவில் அமைய உள்ள ராமர் கோயில் சுமார் 84 ஆயிரம் சதுரடி பரப்பளவில், ஐந்து குவி மாடங்களோடும், மூன்று தளங்களோடும் அமைய உள்ளது. அயோத்தி ராமர் கோயிலின் பிரம்மாண்ட மாதிரி புகைப்படம் பார்ப்பவர்களை வியக்க வைத்து வருகிறது.

ராமர் கோயில் பூமிபூஜை விழாவில் நாளை பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் சுமார் 3 மணி நேரம் இருப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. முதலில் ஹனுமன்கார்ஹி கோயிலில் வழிபடும் அவர், அதனை தொடர்ந்து ராமர் சிலையை வழிபடுகிறார். பின்னர் விழா மேடைக்கு செல்லும் பிரதமர் மோடி, 40 கிலோ வெள்ளி செங்கலை வழங்கி, பூமி பூஜையை தொடங்கி வைக்கிறார். எனினும் விழா மேடையில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல்உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சேர்மன் மஹந்த் கோபால்தாஸ் ஆகிய ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுளளது. அயோத்தி நில விவகாரத்தில் எதிராக வழக்கு தொடர்ந்த இக்பால் அன்சாரி என்பவருக்கும் பூமி பூஜையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விழாவில் நிச்சயம் பங்கேற்க உள்ளதாக, அன்சாரி தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted