பூமி பூஜையையொட்டி விழாக்கோலம் பூண்ட அயோத்தி!

Aug 05, 2020 07:05 AM 589

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்துக்காக, புதன்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் பூமி பூஜை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, அயோத்தி விழாக்கோலம் பூண்டுள்ளது. திரும்பும் இடமெங்கும் சுவர்களில் ராமரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும், விழா நடைபெறும் இடத்துக்கு அனைத்து தெய்வங்களையும் வரவேற்கும் விதமாக ராமார்ச்சன் பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் பங்கேற்ற வேதவிற்பன்னர்கள், தெய்வங்களை வரவேற்கும் விதமாக வேதங்களை முழங்கினர்.

 


ராமர்கோயில் பூமி பூஜை விழாவுக்காக, பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் அயோத்திக்கு தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட செங்கற்கள் எடுத்து வரப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் சேலத்தை சேர்ந்த துறவிகள் சார்பில், 5 கிலோ எடை கொண்ட தங்க செங்கல், 20 கிலோ எடை கொண்ட வெள்ளி செங்கல் எடுத்து வரப்பட்டுள்ளது.


அயோத்தி நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாத வகையில், முக்கிய வீதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அயோத்தி முழுவதும் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 


இதனிடையே பிரம்மாண்ட அயோத்தி கோயில் எவ்வாறு அமையப் போகிறது என்பதை விளக்கும் மாதிரி புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாகர் கட்டடக் கலை வடிவில் அமைய உள்ள ராமர் கோயில் சுமார் 84 ஆயிரம் சதுரடி பரப்பளவில், ஐந்து குவி மாடங்களோடும், மூன்று தளங்களோடும் அமைய உள்ளது. அயோத்தி ராமர் கோயிலின் பிரம்மாண்ட மாதிரி புகைப்படம் பார்ப்பவர்களை வியக்க வைத்து வருகிறது.

Comment

Successfully posted