கொரோனா அச்சுறுத்தலால், ஐபிஎல் தொடர் காலவரையின்றி நிறுத்தம்

May 05, 2021 08:21 AM 5954

கொரோனா அச்சுறுத்தலால் நடப்பு ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி நிறுத்தப்படுவதாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

 

2020ஆம் ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தொற்று குறைந்திருந்ததால் ஐ.பி.எல்.போட்டியை இந்தியாவிலேயே நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டது.

கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வீச தொடங்கியதால், சென்னை, மும்பை, டெல்லி, அகமதாபாத், பெங்களூரு, கொல்கத்தா ஆகிய நகரங்களில் மட்டுமே போட்டிகளை நடத்தியது பிசிசிஐ....

கொரோனாவை தடுக்கும் பாதுகாப்பு நெறிமுறைகளை கடுமையாக்கிய பி.சி.சி.ஐ., பார்வையாளர்களுக்கு தடை விதித்ததுடன்,

ஒவ்வொரு அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் என அனைவரும் வாரம் ஒரு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியது.

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஐ.பி.எல். போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கியது.

அந்த சமயத்தில் இந்தியாவில் கொரோனா கோரத் தாண்டவம் ஆடத் தொடங்கியதால், ஆஸ்திரேலிய வீரர்கள் சாம்பா, ஆண்டிரு டை ஆகியோர் ஐ.பி.எல்.போட்டியிலிருந்து விலகினர்.

போட்டியை நிறுத்த பல்வேறு தரப்பும் கோரிக்கை விடுத்த நிலையில் , அதனை பிசிசிஐ நிராகரித்தது.

நடப்பு சீசனில் 29 லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனால் மே-3ஆம் தேதி நடைபெற இருந்த கொல்கத்தா, பெங்களூருக்கு இடையிலான போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி, தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், மற்றும் பேருந்து ஓட்டுனருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

மேலும் டெல்லி அணியில் அமித் மிஸ்ராவுக்கும், ஐதராபாத் அணியில் சாஹாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதனால், வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடப்பு சீசனுக்கான ஐ.பி.எல். போட்டிகள் நிறுத்தப்படுவதாக பி.சி சி.ஐ அறிவித்துள்ளது.

ஐ.பி.எல். போட்டிகளை நிறுத்தினால் பி.சி.சி.ஐ. 2 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால் எஞ்சிய போட்டிகளை மும்பையில் இம்மாத இறுதியில் நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவு என பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comment

Successfully posted