கொரோனாவை விட மிகப்பெரிய பேரழிவு: மனிதர்களால் காத்திருக்கும் பேரழிவு!!!

May 08, 2020 10:37 AM 2456

இயற்கைக்கு எதிரான மனிதர்களின் செயல்பாடுகளால் கொரோனாவை விட மிகப்பெரிய பேரழிவை சந்திக்க நேரிடும் என அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். அது தொடர்பான செய்தித்தொகுப்பை இப்போது பார்க்கலாம். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 38 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து இருபத்து நான்காயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்த நிலையில், காடுகளை அழிப்பது, நிலத்தின் தன்மையை மாறுதலுக்கு உட்படுத்துவது, மனிதர்களுக்கு ஏதுவாக இயற்கை இருக்க வேண்டுமென்ற நோக்கில் பிற உயிரினங்களை இடமாற்றம் செய்வது உள்ளிட்டவை புதிய நோய்களைத் தோற்றுவிக்கும் என அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களில் முக்கால்வாசி விலங்குகளிலிருந்து ஏற்படுகிறது என்றும், அவை மனிதர்களின் செயல்பாடுகளின் மூலம் பல்கிப் பெருகுவதாகவும் அமெரிக்க நோய்த்தடுப்பு அமைப்பு தெரிவிக்கிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் வவ்வால்களிலிருந்து உருவானதாக கண்டறியப்பட்டுள்ளது. பல வைரஸ்கள் அழிக்கப்பட்ட காடுகள் அல்லது விவசாயத்திற்காக வடிகட்டப்பட்ட சதுப்பு நிலப்பகுதி, சுரங்கம் தோண்டுதல், கட்டிட வேலைகளுக்காக நிலத்தின் தன்மையை மாற்றும்போது பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், காடுகளுக்குள் இருக்கும்போது வவ்வால்களிலிருந்து வைரஸ் பரவினாலும் அது மற்ற விலங்குகளுக்கு பரவுவது குறைவு என்று சொல்லும் அறிவியலாளர்கள், காடுகளை அழித்து அதற்குள் மனிதன் செல்லும்போது பரவலின் வீச்சு அதிகமாகும் என்கின்றனர். பரப்பில் சிறியதாக உள்ள வீடுகள் குடிசைகளை நோக்கி வன விலங்குகள், குறிப்பாக வௌவால்கள் படையெடுக்கும் பழக்கம் உள்ளவை. அதிகமான காடுகள் அழிப்பு மற்றும் சுற்று சூழல் மாறுபாடு ஆசியாவில் நிகழ்ந்திருப்பதால் புதிய வகை கொரோனா வைரஸ், வௌவால்களின் மூலம் ஆசியாவிலிருந்து பரவும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன் கணிக்கப்பட்டது.

மவுண்ட்பெல்லியர் பல்கலைக்கழகத்தின் தொற்று நோயியல் பிரிவு ஆசிரிய ரோஜர் ஃப்ருத்தோஸ் இதுபற்றிக் கூறும்போது, வௌவ்வாலிலிருந்து பரவும் வைரஸ்களின் அடர்த்தியும், அதன் வகைகளும் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு அருகில் அதிகமாக இருப்பது பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்திருப்பதாகக் கூறுகிறார்.அதனால் அடுத்து வரக்கூடிய பேரழிவுகளுக்கு மனிதர்கள்தான் பொறுப்பு என்பதை உணர வேண்டும் என அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Comment

Successfully posted