விருது எங்களோடதுதான்! ஆனால் அதை நாங்க கொடுக்கல!!

Jun 17, 2021 09:56 PM 1659

பப்ஜி மதனின் கலைச் சேவையை பாராட்டி பிளாக் ஆடுகள் விருது வழங்கிய சம்பவம், இணைய வாய்களுக்கு அவலாகி உள்ள நிலையில் பிளாக் ஆடுகளின் மேய்ப்பர், அது குறித்து பேசிய வீடியோ, நெட்டிசன்கள் வாயில் விழுந்த அவலுக்கு சர்க்கரை ஆகி உள்ளது.

மந்தையில் இருந்த ஆடுகள் சந்தைக்கு வந்தது எப்படி...? பார்க்கலாம்.

Vulgar ஆக பேசி வயிறு வளர்க்கும் மதனின் வீடியோவை 10 நிமிடம் கூட கேட்க முடியவில்லை என உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி காதை மூடுகிறார்.

ஆனால் மதனின் அந்த ஆபாச கச்சேரிக்கு அவார்டு வழங்கி கெளரவம் வழங்கி இருக்கிறது தொலைக்காட்சிக்கு நிகரான வருமானத்துடன் இயங்கும் பிரபல யு டியூப் சேனல் ஒன்று.

8 லட்சம் சப்ஸ்கிரைபர் பெல் பட்டனை அழுத்தும் வரைக்கும் மதன் மீது சர்ச்சைகள் எழவில்லை. புகார்கள் வரவில்லை. எனினும் ”ஆடு குழுமம்” மதனுக்கு விருது வழங்கிய நிகழ்வை, கலாய்க்க தான் செய்வார்கள்.

கவனக்குறைவாக நடந்து கொண்ட அந்த நிறுவனம் அதனை கடந்து செல்வதுதான் முறை. ஆனால் இது குறித்து விளக்கம் அளிக்கிறேன் பேர்வழி என அதன் மேய்ப்பர் அளித்துள்ள விளக்க வீடியோ தான் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

”விருது எங்களோடதுதான்... ஆனா அதை நாங்க கொடுக்கல....” ,

“வீடியோவுக்குதான் அவார்டு கொடுத்தோம்...ஆனா வீடியோ முழுவதும் நாங்க பார்க்கலை”  என படையப்பா பார்ட் 2 செந்திலாக மாறி FUN பண்ணி கொண்டிருக்கிறார் அந்த ஆடு குழுமத்தின் மேய்ப்பர்.

PRANK ற்கு பெயர் போன குறிப்பிட்ட பிளாக் ஆடு சேனல், கடைசியில் மதனுக்கு விருது வழங்கிய நிகழ்வே ஒரு PRNAK என்பது போல் நழுவுகிறது.

ஏற்கனவே ஏமாற்று நிறுவனம் ஒன்றுக்கு புரோமோஷன் செய்து சிக்கலில் சிக்கியது பிளாக் ஆடு குழுமம்.

அப்போதும் இப்படிதான்... ”நாங்கள் செய்தது தவறே இல்லை” மைக்கையும் கேமராவையும் போட்டு தாண்டினார்கள். இப்போதும் அதே சத்தியம்...அதே மைக்...

மதன் வீடியோ நீண்ட நேரம் இருந்ததால் அதைப் பார்க்க வில்லை என்கிறார்கள்.

தேசிய விருது நடுவர்களின் மேஜையில் வருடம் தோறும் 1000 க்கு மேற்பட்ட படங்கள் குவிகிறது. அதற்காக முதல் 10 நிமிடத்தை மட்டும் பார்த்து விட்டு விருது அறிவிப்பு வெளியிட்டால் ஒப்புக் கொள்வோமா..? மாட்டோம்.

விருது என்பது அங்கீகாரம்.

அதனை சரியான நபர்களின் கைகளில் கொண்டு சேர்ப்பதுதான் விருது அளிப்பாளர்களின் தலையாய பணி.

ஆனால் அந்த பணியில் அலட்சியம் காட்டி விட்டு தற்போது அந்த விருதை திரும்ப பெற போகிறோம் என்கிறது ஆடு குழுமம்.

கொடுத்து கொடுத்து வாங்குவதற்கு அது என்ன விருதா... இல்லை விளையாட்டு பொருளா....?

விருது வழங்கின் ஆய்ந்து வழங்குக அஃதிலார்
வழங்குதல் வழங்காமை நன்று.

நியூஸ் ஜெ செய்திகளுக்காக ராம்குமார்..

Comment

Successfully posted