ஆன்டி இண்டியன் திரைப்படம் - ஆர்ப்பாட்டமில்லாத அரசியல் பகடி

Dec 07, 2021 08:17 PM 2767

ஆன்டி இண்டியன் - ஆர்ப்பாட்டமில்லாத அரசியல் பகடி


புதுமையான முயற்சிகளுடன் உருவாகும் திரைப்படங்களுக்கும், நேர்மையான அரசியல் பேசும் படங்களுக்கும் இடையே பெரிய இடைவேளிகள் உள்ளன. சினிமாவை வணிக ரீதியாக பார்த்தால் இவைகள் இரண்டுமே வேறுவேறுத் தளங்கள் என்பது புலப்படும். இந்த இரண்டு சிக்கல்களையும் ஒரே மையப்புள்ளியில் இணைத்து அதனை வெற்றியாக்குவது அவ்வளவு எளிதானதல்ல.

ஆனால், ப்ளு சட்டை மாறன் இயக்கியுள்ள ‘ஆன்டி இண்டியன்’ படம் இந்த புதிய முயற்சியில் பார்வையாளர்களை அசர வைக்கிறது. சமகால அரசியலில் முதன்மையான பிரச்சினையாக கருதப்படும் மத அடிப்படைவாத அரசியலை, எந்த சமரசமும் இல்லாமல் நேர்மையாக அணுகியுள்ளது.

கலப்புத் திருமணம் செய்துகொண்ட இப்ராஹிம் - சரோஜா, இவர்களது மகன் பாட்ஷா கொலை செய்யப்படுகிறார். தந்தை இப்ராஹிம் ஏற்கனவே உயிரிழந்துவிட்ட நிலையில், பாட்ஷாவின் உடலை அடக்க முடியாது என சில காரணங்கள் கூறி முஸ்லிம் ஜமாத்தார்கள் மறுக்கிறார்கள்.

இதனை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள நினைக்கிறது இந்து அடிப்படைவாத பின்னணிக்கொண்ட கட்சி. அங்கும் சில பிரச்சினைகள் எழ, பாட்ஷாவின் தாய் சரோஜா லூர்துமேரியாக மதம் மாறிவிட்டதாகக் கூறி, பாட்ஷாவின் உடலுக்கு சொந்தம் கொண்டாடுகிறது கிறிஸ்துவ அமைப்பு.

இன்னொருபக்கம் மயிலாப்பூர் தொகுதி இடைத்தேர்தலில், தோல்வியில் இருந்து தப்பிக்க ஆளுங்கட்சியும் பாட்ஷாவின் மரணத்தை வைத்து பிண அரசியல் செய்கின்றது. இறுதியில் மத அடிப்படைவாதங்களுக்குள் சிக்கிக்கொண்ட பாட்ஷாவின் சடலமும், அதனை சுற்றி நிகழும் பிண அரசியலும் என்ன ஆனது என்பது தான் ‘ஆன்டி இண்டியன்’.

படத்தின் தலைப்பைப் போலவே கதைக்களமும் பல சர்ச்சைகளுக்கு வித்திடும் அம்சங்கள் நிறைந்தது தான். ஆனால், அவை எதற்கும் இடம்கொடுக்காமல், பிரசாரத்தன்மையும் இல்லாமல் நேர்த்தியாக தமிழில் ஒரு நல்ல படத்தை வழங்கியிருக்கார் ப்ளு சட்டை மாறன். பிணவறையில் இருந்து தொடங்கும் திரைக்கதை, மூன்று மதங்களைச் சார்ந்த கடலோர எளிய மக்களின் பின்னணியில் பயணித்து நிறைவடைகிறது.

மனிதனை நல்வழிப்படுத்தவே மதங்கள். ஆனால், மதங்களைப் பின்பற்றுபவர்களில் சிலரிடம் மட்டுமே காணப்படும் அடிப்படைவாதம், சமூகத்தை எப்படி சமசீரற்ற நிலைக்கு கொண்டுசெல்கிறது என பிணத்தை வைத்து பேசியிருக்கிறார் மாறன்.

இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் என மும்மதங்களையும், அவைகளை புனிதப்படுத்துவதற்காக இயக்கங்களும் அமைப்புகளும் கட்சிகளும் மேற்கொள்ளும் அரசியலை வெளிப்படையாகவே பகடி செய்திருக்கிறார். மத அடிப்படைவாதங்களை எவ்வளவு வெளிப்படையாக நையாண்டி செய்கிறாரோ, அதே அளவு அதிகார வர்க்கத்தின் சுயநலத்தையும், தேர்தல் அரசியலையும் தோலுரித்துக் காட்டியுள்ளார்.

யாரும் தாங்கள் விரும்பியபடி இறைவனை வழிபடுவதில் தவறில்லை, ஆனால், கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில் இருந்து வெளிவரும் போது மனிதர்களாக வாருங்கள். அதுவே ஆகச்சிறந்த மானுடப் பண்பு என படம் ஆரம்பிக்கும் போதே வாட்ஸப்பில் வலம்வந்த புறா கதை கூறிய மாறன், இறுதியில் அதற்கு நியாயமும் சேர்த்திருக்கிறார்.

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும், படமாக்கியதில் அந்தத் தொய்வுகள் இல்லை. பல காட்சிகள் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது பாராட்டப்பட வேண்டியவை. ராதாரவி, ஆடுகளம் நரேன், பசி சத்யா இவர்களுடன் இன்னும் ஓரிரண்டு பாத்திரங்களைத் தவிர மற்றவர்கள் அதிகம் அறியப்படாத முகங்கள் தான்.

இவர்களும் பாட்ஷா பாத்திரத்தில் சடலமாக வரும் ப்ளு சட்டை மாறன், கருஞ்சட்டையுடன் வலம்வரும் மறைந்த மாறனின் பாத்திரம், கானா பாடும் இளைஞர்கள் என அனைவரும் நிறைவான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

‘ஆன்டி இண்டியன்’ படம் புதிய முயற்சியா என்றால் இல்லை, ஆனால், சமகால அரசியலில் தமிழ் சினிமாவிற்கு இது ரொம்பவும் அரிதான படைப்பு.

- அப்துல் ரஹ்மான்

Comment

Successfully posted