எழுத்தாளர் போகன் சங்கருக்கு கனடா தமிழ் இலக்க்ய தோட்ட விருது

May 07, 2019 12:46 PM 1801

கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியவர்களின் ஆதரவுடன் ஓர் அறக்கட்டளையாக 2001ம் ஆண்டு ரொறொன்ரோவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் பொதுவான நோக்கம் உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதாகும். தமிழ், ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பு, அரிய தமிழ் நூல்களை மீள் பதிப்பு செய்வது, தமிழ் பட்டறைகள் நடத்துவது, நூலகங்களுக்கு இலவசமாக தமிழ் நூல்கள் அளிப்பது, தமிழ் சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்குவது ஆகியவை இதனுள் அடங்கும்.

ஆண்டுதோறூம் வழங்கப்படும் விருதுகளில், இந்த ஆண்டு கனடா தமிழ் இலக்கியத்தோட்டத்தின் கவிதைக்கான விருதை கவிஞர் போகன் பெறுகிறார். கடந்த 2017 ம் ஆண்டு இந்த விருதை அம்மை தொகுப்புக்காக கவிஞர் பா.அகிலன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தனது “சிறிய எண்கள் உறங்கும் அறை” தொகுப்பிற்காக இந்த விருதைப் பெறுகிறார்.

இவர் 1972 ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தார். இயற்பெயர் என்னவோ கோமதி சங்கர் தான். ஆனால் எழுத்தில் பரகாயப்பிரவேசம் காட்டுவதாலோ என்னவோ போகன் என்ற பெயரில் நிலைத்துக்கொண்டார். கவிஞரும் சிறுகதையாளருமான போகன் தமிழ்வெளியில் நவீன கவிதைகளில் குறிப்பிடத்தக்க பதிவுகளை செய்து வருபவர். 2012 ம் ஆண்டு வெளியிடப்பட்ட இவரது “எரிவதும் அனைவதும் ஒன்றே” என்னும் முதல் கவிதை நூலே கவிஞர் ராஜ மார்த்தாண்டன் விருதையும் சுஜாதா அறக்கட்டளை விருதையும் பெற்றது.

இப்போது கனடா இலக்கியத் தோட்ட கவிதை விருது பெறவிருக்கும் இவரது கவிதை தொகுப்பான “சிறிய எண்கள் உறங்கும் அறை ” நூல் கடந்த 2018 ல் கவிஞர் ஆத்மாநாம் விருதும் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எழுத்தின் வன்மையால் எல்லைகளைக் கடக்கும் போகன் சங்கருக்கு நியூஸ்ஜெ குழுமம் சார்பாக வாழ்த்துகளும் பாராட்டுகளும்.....

Comment

Successfully posted