திருடுவதற்கு முன் கடவுளுக்கே லஞ்சம் - பக்தி திருடனுக்கு போலிசார் வலைவீச்சு

Oct 16, 2020 10:14 PM 1055

கோயிலில் திருட வந்த இளைஞர் திருடுவதற்கு முன்பு கடவுளுக்கு ஒரு ரூபாய் காணிக்கை செலுத்திவிட்டு உண்டியலை உடைத்து திருடிய சம்பவம் சென்னை திருவான்மியூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடிவேலு ஒரு திரைபடத்தில், திருடுவதற்கு முன்பு சாமி கும்பிட்டு திருட செல்வார் அதே போல சென்னையில் ஒரு நகைச்சுவை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை திருவான்மியூரில் மருந்தீஸ்வரர் எனும் புகழ்பெற்ற சிவன் கோயில் உள்ளது. கடந்த 15ஆம் தேதி வழக்கம்போல் கோயிலை மூடிவிட்டு, மறுநாள் அதிகாலை வந்து திறந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காரணம், கோயிலின் இரண்டு உண்டியல்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணத்தை யாரோ கொள்ளையடித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அருகில் உள்ள திருவான்மியூர் காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கோயிலின் உள்ளே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் தனிநபராக ஒருவர் கோயில் உள்ளே நுழைகிறார், அவர் சுற்றும் முற்றும் பார்த்து சாமி கும்பிட்டுகொண்டு நேராக கோயில் வாசலில் இருக்கும் உண்டியலில் தன்னுடைய பாக்கெட்டில் இருக்கும் ஒரு ரூபாயை எடுத்து போட்டார். இதை பார்த்த போலீசாருக்கு நகைப்பு கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏதாவது காரியம் தொடங்கும் முன் கோயிலுக்கு சென்று சாமியை கும்பிட்டு, உண்டியலில் பணத்தை போட்டு காரியத்தை தொடங்குவோம். அதுபோல், இந்த கோயிலில் திருட வந்தவர் கூட உண்டியலில் காசை போட்டு திருடிச் சென்றது பார்ப்போருக்கு நகைப்பை உண்டாக்குவது போல இருந்தது.

யாரும் சுலபமாக கோயில் பூட்டிய பிறகு உள்ளே நுழைய முடியாதளவிற்கு கோயிலின் மதில்சுவர்கள் உயரமாக இருந்தபோதும் இந்த நபர் எப்படி வந்தார் என்பதை ஆராய போலீசார் அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அதில் கோயிலில் ஒருபுறம் மின் வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து இருந்ததை பயன்படுத்தி இவர் திருட வந்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். கோயிலில் திருடி சென்ற பக்தி திருடனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Comment

Successfully posted