பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன விமானிகளின் வேலை நிறுத்தம். ஏன்? என்ன?

Sep 11, 2019 07:48 AM 148

இரண்டாம் நாளாக இன்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன விமானிகளின் வேலை நிறுத்தம் தொடர்கிறது. ஏன் நடக்கிறது வேலை நிறுத்தம்? இதனால் விமானப் பயணிகளுக்கு என்ன பாதிப்பு?

உலகின் மிகப் பெரிய விமான சேவை நிறுவனங்களில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனமும் ஒன்று. உலகின் தலை சிறந்த சேவை நிறுவனங்களில் ஒன்றாகவும் இது இருந்துவந்தது. பிரிட்டிஷ் ஏர்வேஸில் பணியாற்றிவரும் விமானிகள் தங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை, அதிக பிடித்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன - ஆகிய குற்றச்சாட்டுகளை கடந்த சில மாதங்களாக முன்வைத்து வந்தனர்.

இந்நிலையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திடம் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் சங்கமான பால்மா தங்களது வேலை நிறுத்த நோட்டீஸை கடந்த ஆகஸ்டில் அளித்தது. அதில் செப்டம்பர் மாதம் 9,10 மற்றும் 27ஆம் தேதிகளில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் அனைவரும் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பை விமானிகளே திரும்பப் பெறுவார்கள் என்று நினைத்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், அவர்களுடனான பேச்சுவார்த்தையில் பிடிகொடுக்காததோடு, தங்கள் பயணிகளுக்கும் இந்தச் சிக்கல் குறித்து தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் சொன்னபடி நேற்று வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர். அந்நிறுவனத்தின் வரலாற்றில் இதுவே முதல் வேலை நிறுத்தமாக அமைந்தது. அப்போது தங்களது நூற்றுக் கணக்கான விமானப் பயணங்களையும் ரத்து செய்ய வேண்டிய நிலைக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஆளானது. இதனால் பிரிட்டிஷ் ஏர்வேஸில்
டிக்கெட்டுகளைப் பதிவு செய்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிகளுக்கு உள்ளானார்கள்.

அவர்களுக்கு கட்டணத்தைத் திருப்பிக் கொடுப்பது, மாற்றுப் பயணச் சீட்டுகளை ஏற்பாடு செய்வது - போன்ற சுமைகள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீது விழுந்தன. இதனால் இந்த 2 நாட்களில் மட்டும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்திற்கு இந்திய
மதிப்பில் சுமார் 1051 கோடிகள் இழப்பு ஏற்பட்டு உள்ளது. அத்தோடு சந்தையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் சேவைத் தரத்தையும் இந்தச் சம்பவம் கேள்வி உள்ளாக்கி உள்ளது.

மேலும் அடுத்து வரும் 27ஆம் தேதியும் விமானிகளின் வேலை நிறுத்தம் நடைபெற உள்ளதால், அதற்கு முன்னர் ஊதியம் குறித்த சிக்கல்களைக் களைய வேண்டிய தேவை பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது.

Comment

Successfully posted