2 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சேலம் - சென்னை ரயில் கொள்ளை!  பர்தி பழங்குடி கொள்ளையர்கள் 2 பேர் கைது

Oct 13, 2018 10:54 PM 613

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி, சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சின்னசேலம் - விருத்தாச்சலம் இடையே ரயில் வந்த போது இந்த கொள்ளை அரங்கேறியது. ரயில் மேற்கூரையை துளையிட்டு ரூ. 5.78 கோடி மதிப்பிலான கிழிந்த நோட்டுக்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்த சம்பவம் நடைபெற்று சுமார் 2 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது இதில் ஈடுபட்ட கொள்ளையர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து சிபிசிஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கொள்ளையில் ஈடுபட்ட மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த 38 வயதான தினேஷ் பர்தி, ரோகன் பர்தி ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ளதாக கூறியுள்ளனர்.

இவர்கள் மத்திய பிரதேசத்தில் உள்ள பர்தி என்ற பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். இந்த இனத்தவர்கள் சாலையோரங்களில் வசிப்பவர்கள். பெரும்பாலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு, எளிதாக தப்பி விடுவர் என கூறப்படுகிறது.

5 பேர் கொண்ட கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், 2 பேர் ரயிலை துளையிட்டு உள்ளே சென்று நோட்டுக்களை, லுங்கி வேட்டியில் கட்டி, அதனை ரயில் கூரை மீது பயணம் செய்த 3 பேரிடம் கொடுத்துள்ளனர்.

அவர்கள் லுங்கியில் சுற்றிய ரூபாய் நோட்டுக்களை, விருத்தாச்சலம் ரயில் நிலையத்திற்கு சற்று தூரம் முன்பு தண்டவாளத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த அந்த கும்பலை சேர்ந்த மற்றவர்களிடம் தூக்கி வீசியுள்ளனர் என விசாரணையில் தெரியவந்ததாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். பெரும் புதிராக இருந்த இந்த வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு விடை கிடைத்துள்ளது.

Comment

Successfully posted