உடல் உறுப்பு தானத்தில், தமிழகம் தொடர்ந்து 4-வது முறையாக முதலிடம்: முதலமைச்சர் பெருமிதம்

Aug 13, 2019 06:50 AM 291

நாட்டிலேயே, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், தமிழகம் தொடர்ந்து நான்காவது முறையாக முதலிடம் வகிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13ந் தேதி, உடல் உறுப்பு தான தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில், உடல் உறுப்பு தானம் ஒரு மக்கள் இயக்கமாகவே மாறி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலேயே முதன் முதலாக உடல் மாற்று அறுவை சிகிச்சை ஆணையம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந் தேதி உருவாக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குவதாக பாரத பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளதை சுட்டிகாட்டிய முதலமைச்சர், தமிழகத்தில் இதுவரை ஆயிரத்து 297 கொடையாளர்களிடமிருந்து 7 ஆயிரத்து 568 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உடல் உறுப்பு தானம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட பல்வேறு நிகழ்ச்சிகளை தமிழக அரசு நடத்தி வருவதாகவும், அதிகபட்சமாக 25 லட்சம் வரை முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் மூலம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஏழை, எளிய மக்களுக்கு கட்டணமில்லாமல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், தமிழத்தை உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து முதன்மை மாநிலமாக விளங்கிட செய்வோம் என்று மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

உடல் உறுப்பு தான தினமான இன்று, “உடல் உறுப்பு தான செய்வோம்! உயிர்களை காப்போம்” என்ற உறுதிமொழியை அனைவரும் ஏற்போம் என்றும் அந்த அறிக்கையின் வாயிலாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted