முத்துராமலிங்க தேவரின் 112-வது ஜெயந்தி விழா: முதல்வர், துணை முதல்வர் மரியாதை

Oct 30, 2019 11:28 AM 616

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில், 112-வது ஜெயந்தி விழாவும் 57-வது குருபூஜை விழாவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஆண்டுதோறும், அக்டோபர் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பதிமூன்றரை கிலோ எடைகொண்ட தங்கத்தாலான கவசத்தை வழங்கினார். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி, குரு பூஜை விழாவின் போது தேவர் சிலைக்கு அந்த தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜை, தீபராதனை நடந்து வருகிறது.

இந்த நிலையில், பசும்பொன்னில் இன்று நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்ற முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், தங்கக்கவசம் அணிவிக்கப்பட்ட முத்துராமலிங்க தேவரின் திருவுருவச்சிலைக்கு மலர்வளையம் வைத்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினர். இந்த விழாவில், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

முன்னதாக மதுரையில் உள்ள தேவரின் சிலைக்கு, முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Comment

Successfully posted