மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்வு

Oct 09, 2019 08:18 PM 107

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 5 சதவீதம் உயர்த்தி வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் ஒப்புதல்கள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை, 5 சதவீதம் உயர்த்தி வழங்க, அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக கூறினார். இதன் மூலம், தற்போது 12 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 17 சதவீதமாக உயர்கிறது. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் 50 லட்சம் பேரும், ஓய்வூதியத்தாரர்கள் 65 லட்சம் பேரும் பயன் அடைகின்றனர்.

அகவிலைப்படியானது, ஜூலை மாதம் முன் தேதியிட்டு வழங்கப்படும் என பிரகாஷ் ஜவடேகர் கூறினார். தீபாவளி பண்டிகை நேரத்தில் வெளியாகி உள்ள அறிவிப்பு, மத்திய அரசு ஊழியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Comment

Successfully posted