அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்துக்கு கார் பரிசு

Jan 17, 2020 10:08 PM 1710

காணும் பொங்கலை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் பெரும் உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது. தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 739 காளைகளும், 688 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். ஏற்கனவே மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டிருந்த நிலையில், காலையில் மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கொடியசைத்து துவக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து ஊர் கோயில் காளைகளுக்கு முதல் மரியாதை செய்யப்பட்டு, வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. கோயில் காளைகளை தொடர்ந்து, வாடிவாசலில் காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

வாடிவாசலில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் ஆர்வம் காட்டினர். காளைகளை தழுவிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இப்போட்டியில்,16 காளைகளை பிடித்த ரஞ்சித் என்பவர் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு ஹூண்டாய் சாண்ட்ரோ கார் பரிசாக அளிக்கப்பட்டது. 14 காளைகளை அடக்கிய கார்த்தி 2 ஆம் பரிசாக சி.டி.100 பைக்கை பரிசாக பெற்றார். 13 காளைகளை அடக்கிய கணேசன் 3 ஆம் பரிசை வென்றார்.

இதே போன்று பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசை மாரநாடு குலமங்கலம் காளை வென்றது. புதுக்கோட்டையை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் அனுராதாவின் காளை இரண்டாம் பரிசை தட்டிச் சென்றது. இதே காளைதான் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதலிடத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. இதே போன்று கார்த்திக் என்பவரின் காளை 3 ஆம் பரிசை வென்றது.

Comment

Successfully posted