சரவணா ஸ்டோர்ஸ் கிளை மேலாளர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு!

Mar 19, 2020 03:24 PM 693

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை பின்பற்றாத புரசைவாக்கம் சரவணா ஸ்டோர் மேலாளர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு வணிக வளாகம், கேளிக்கை விடுதிகள்,  திரையரங்குகள் ஆகியவற்றை வரும் 31ம் தேதி வரை திறக்க வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் கடந்த 17ம் தேதியன்று புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர் எப்போதும் போல் செயல்பட்டு வந்தது. தகவலறிந்த மாநகராட்சி மண்டல அதிகாரி மனோகரன், காவல்துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணா ஸ்டோர் வணிக வளாகத்துக்கு சென்று சீல் வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று சரவணா ஸ்டோர் வளாகத்தில் செயல்பட்டு வந்த சிறிய கடைகள் திறந்த நிலையில் இருந்தது. இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சரவணா ஸ்டோரின் மேலாளர் குருநாதன், மாநகராட்சி அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் குருநாதன் மீது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், முறையற்று தடுத்தல், ஆபாசமாக பேசுதல், ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted