விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரை கைது செய்யக்கோரி வழக்கு!

Aug 25, 2020 05:31 PM 863

ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் அதன் விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரை கைது செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மூன்று வாரங்களில் பதிலளிக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானதால் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், நேரடி சூதாட்டத்திற்கு தடையுள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டங்கள் தற்போது அதிகரித்து வருவதாக புகார் தெரிவித்துள்ளார். தொடக்கத்தில் பொழுதுபோக்கிற்காக அதற்குள் செல்லும் இளைஞர்கள், பின்னர் அதற்கு அடிமையாகிவிடும் சூழல் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா போன்ற பிரபலங்களை வைத்து விளம்பரங்கள் வெளியிட்டு இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு, மனு தொடர்பாக, மூன்று வாரங்களில் பதிலளிக்க, மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.

Comment

Successfully posted