ஆம்பூர் திமுகவில் சாதி மோதல் உச்சகட்டம்

Jan 21, 2022 05:30 PM 4521

ஆம்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதனை தொலைபேசி உரையாடலில் இழிவாகப் பேசி சமூக ஊடகங்களில் பதிவிட்டு சாதி பிரச்னை தூண்டியதாக, திமுக மாவட்ட குழு உறுப்பினரின் கணவர் வழக்கறிஞர் முத்துக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். 

மாதனூர் ஊராட்சி ஒன்றியம் கைலாசகிரி ஒன்றாவது வார்டு திமுக மாவட்ட கவுன்சிலர் சரிதாவின் கணவர் முத்துக்குமார் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.

அரசு விழாவில் தனது மனைவி பேச அனுமதி மறுத்த ஆம்பூர் திமுக எம்எல்ஏ வில்வநாதனை, முத்துக்குமார் ஆபாச வார்த்தைகளில் வசைபாடிய உரையாடல் சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்த நிலையில், திமுக எம்எல்ஏ வில்வநாதன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தன்னுடைய வீட்டிற்கு வந்து கொலை மிரட்டல் விடுத்ததாக உமராபாத் காவல் நிலையத்தில் முத்துக்குமார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர்.image

இரண்டு நாட்களுக்கு முன்பு குளிதிகையில் உள்ள முத்துக்குமாருக்கு சொந்தமான ஹோட்டலுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கிய திமுக எம்எல்ஏ-வின் ஆதரவாளர்கள், நேற்றிரவு மீண்டும் ஹோட்டலுக்கு சென்று தீ வைத்தனர். முத்துக்குமாரை கைது செய்ய கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, கைலாசகிரி பகுதியில் வீட்டில் இருந்த முத்துக்குமாரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், முத்துக்குமாரின் ஹோட்டலுக்கு தீ வைத்த மூவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்பூரில் திமுகவுக்குள் தலைவிரித்தாடும் சாதி மோதல், திடீரென்று தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Comment

Successfully posted