ஐ.பி.எல். கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி

Apr 20, 2021 09:11 AM 1133

ஐ.பி.எல். கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்தது.

மும்பையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர் ரித்துராஜ் கெய்க்வாட், 10 ரன்களில் வெளியேறினார்.

மறுமுனையில் அதிரடியாக விளையாடிய டூப்ளஸிஸ், 33 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். ராயுடு,ரெய்னா ஆகியோர் ரன் குவிக்க முற்பட்டு பெரிய ஸ்கோரை அடிக்காமல் அடுத்தடுத்து வெளியேறினர்.

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கேப்டன் தோனி,17 பந்துகளில் 18 ரன்கள் அடித்து அவுட்டானார். இறுதியில் பிராவோ 8 பந்துகளில் 20 ரன்கள் எடுக்க, சென்னை அணி 20ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது..

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்களில் மனன் வோஹ்ரா 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாம் கரண் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனையும் ஒரே ரன்னில் வெளியேற்றினார் சாம் கரண்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறு முனையில் துவக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில், ஷிவம் துபே 17 ரன்களில் ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.

இதையடுத்து, டேவிட் மில்லர் மற்றும் ரியான் பராக் ஆகியோரை ஆல்ரவுண்டர் மொயின் அலி ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற்ற, சிஎஸ்கே அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்தது.

இதை தொடர்ந்து, ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கிரிஸ் மோரிஸையும், மொயின் அலி, டக் அவுட்டாக்கி வெளியேற்றியது, சிஎஸ்கே ரசிகர்களுக்குக் இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.

20ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு, ராஜஸ்தான் அணி 143 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

மொயின் அலி 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா , சாம் கரண் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

 

இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 13 வது லீக் போட்டியில், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன. 

Comment

Successfully posted