ரூ.9000 கோடி கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!

Mar 28, 2020 04:25 PM 754

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு, சிறப்பு நிதியாக 9 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கவேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இந்தநிலையில், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதிப்புகளை ஈடுசெய்ய நிதி கோரி பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகத்திற்கு சிறப்பு நிதியாக 9 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், மாநில அரசுகள் கூடுதல் கடனுதவியாக ரூ.1 லட்சம் கோடி பெற அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை சீரமைக்க இந்த நிதியுதவி உதவும் என தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பட்ஜெட் மூலம் மாநில அரசுகளுக்கு ஒதுக்கிய நிதியுடன் கூடுதலாக RBI-யிடம் கடன் பெற்றுத்தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். சிக்கலான இந்த தருணத்தில், தனது கோரிக்கையை பிரதமர் மோடி கனிவுடன் பரிசீலிப்பார் என நம்புவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தடுப்புப்பணிகளை மேற்கொள்ள ஏற்கெனவே 4 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கும்படி முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது 9 ஆயிரம் கோடி ரூபாய் வழங்குமாறு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted