மருத்துவர் தினத்தையொட்டி மருத்துவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு!

Jul 01, 2020 03:28 PM 5826

உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் மருத்துவர்களின் தியாகத்திற்கு நிகர் ஏதுமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தேசிய மருத்துவர் தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை இறைவனுக்கு நிகராக கருதுவதாக குறிப்பிட்டுள்ளார். நேரம் காலம் பார்க்காமல், தன்னலம் கருதாமல், ஓய்வின்றி உழைக்கக் கூடியவர்கள் மருத்துவர்கள் என்றும், இந்த பேரிடர் நோய்த் தொற்று காலத்தில், தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் மருத்துவர்களின் தியாகத்திற்கு நிகர் ஏதுமில்லை என குறிப்பிட்டுள்ளார். மகத்தான பணி செய்து வரும் மருத்துவர்களுக்கு எப்போதுமே அதிமுக அரசு துணை நிற்கும் எனவும் முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். மனித உயிர்களைக் காக்கும் அற்புதமான பணியை மேற்கொண்டு வரும் மருத்துவர்களின் வாழ்வு சிறக்கட்டும் எனவும் முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேபோல், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில், மருத்துவர்களின் பங்கு அளப்பறியது என குறிப்பிட்டுள்ளார். கொரோனா சூழலிலும் தன்னலம் கருதாது, இரவு, பகல் பாராமல், அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் துறையை சார்ந்த அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவிப்பதாக துணை முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Comment

Successfully posted