இலவச தாய்-சேய் ஊர்திகளை துவக்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

Feb 04, 2019 01:46 PM 304

பல்வேறு நலத்திட்ட சேவைகள் மற்றும் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுகாதாரத்துறைக்கு 15 புதிய இலவச தாய், சேய் வாகனம் வழங்கப்பட்டு, அதன் சேவையை முதலமைச்சர் பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதையடுத்து, யோகா மற்றும் இயற்கைத் துறையில் மருத்துவ பட்டம் பெற்ற, 72 உதவி மருத்துவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு முதலமைச்சர் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலமாக, 2 கைகளையும் மீண்டும் பெற்ற நாராயணசாமி என்னும் பயனாளி, முதலமைச்சரை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். அப்போது, முதலமைச்சர், அவரின் கையை பிடித்து, அவரிடம் உரையாடி, விவரங்களை கேட்டறிந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவரையும் அழைத்து, வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர். பின்னர், அருகில் இருந்த திரையில் நாராயணசாமி, அறுவை சிகிச்சைக்கு முன்பு இருந்த நிலை மற்றும் தற்போதைய நிலை குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. அதைப் பார்த்து, முதலமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கைகளை தட்டி ஆரவாரம் செய்தது, அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

பின்னர், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் பூங்கொத்து கொடுத்து, வாழ்த்து பெற்றார் நாராயணசாமி. அவருடன் கை குலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் துணை முதலமைச்சர்.

இத்தகைய சம்பவங்கள், அதிமுக ஆட்சியில், மக்கள் அடையும் பயனுக்கு ஒரு சாட்சியாக விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.

Comment

Successfully posted