சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

Jan 14, 2020 09:29 AM 1069

சென்னை எம்.ஜி.ஆர். மத்திய ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 2 வயது குழந்தை, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டது.

அசாம் மாநிலத்தை சேர்ந்த மர்ஜினா என்பவர் மூன்றாவது கணவருடன் வசித்து வருகிறார். மர்ஜினா இரண்டு பெண் குழந்தைகளுடன் நேற்றிரவு சென்னை எம்.ஜி.ஆர். மத்திய ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். கண் விழித்து பார்த்த போது 2 வயது பெண் குழந்தை ரஜிதாவை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர் ரயில்வே காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் சோதனை செய்ததில், மர்ம நபர் ஒருவர் குழந்தையை தூக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதையடுத்து அந்த நபரை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் குழந்தையுடன் சுற்றித்திரிந்த வடமாநில நபரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். இதில், சென்னை எம்.ஜி.ஆர். மத்திய ரயில் நிலையத்தில் குழந்தையை கடத்தியதும், மும்பை விரைவு ரயிலில் தப்பி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து கடத்தப்பட்ட 2 வயது குழந்தையை பத்திரமாக மீட்ட காவல்துறையினர், மேற்கு வங்கத்தை சேர்ந்த தீபக் மண்டல் என்பவரை கைது செய்துள்ளனர்.

Comment

Successfully posted