கோவாவில் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தனர்

Jul 11, 2019 07:57 AM 109

கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் அக்கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற 40 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்றது. 13 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக மற்ற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சியை பிடித்தது. அதன்படி மனோகர் பாரிக்கர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். உடல்நலக் குறைவால் பாரிக்கர் பிப்ரவரி மாதம் உயிரிழந்ததை அடுத்து, பிரமோத் சாவந்த், கோவாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார்.

இந்நிலையில், பாபு கவேல்கர் தலைமையிலான 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். இது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகத்தில் காங்கிரஸ், மதசார்பாற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததால் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான ஆட்சி தொடர்வதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில், கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்துள்ளது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted