கொரோனா ஊரடங்கால் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா!!

Aug 02, 2020 04:45 PM 707

கொரோனா ஊரடங்கால், ஆடிப்பெருக்கு விழா களையிழந்த நிலையில், சில இடங்களில் ஊரடங்கை மீறி பொதுமக்கள் ஆடிப்பெருக்கை கொண்டாடினர்.

ஆண்டுதோறும் ஆடி 18ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். காவிரி கரைகளில் மக்கள் புனித நீராடியும், படித்துறைகளில் படையலிட்டும் காவிரித் தாயை வழிபடுவார்கள். புதுமணத் தம்பதிகள் புது தாலிகயிற்றை மாற்றுவதும், திருமணம் ஆகாத இளம்பெண்கள் கன்னிமார் பூஜை செய்து காவிரித்தாயை வழிப்படுவதும் வழக்கம். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பல இடங்களில் ஆடிப்பெருக்கு விழா களையிழந்தது. பல லட்சம் பேர் கூடும் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை இன்று வெறிச்சோடியது. சங்கமேஸ்வர் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பவானி கூடுதுறையில் பக்தர்கள் கூடாத வகையில், போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இதனால் ஏராளமானோர் வீடுகளில் இருந்தபடி ஆடிப்பெருக்கை கொண்டாடினர்.

இதேபோல், தஞ்சை அருகே உள்ள கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு உள்ளிட்ட இடங்களில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் களையிழந்து காணப்பட்டது. காவிரி ஆற்றங்கரைகளில் உள்ள படித்துறைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பொதுமக்கள் கூடாத வண்ணம் போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக காவிரி கரையோரங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆடி பெருக்கை தங்களது வீடுகளிலேயே கொண்டாடினர். எப்போதும் ஆடி பெருக்கையொட்டி கோலகலமாக காணப்படும் காவிரி கரையோரப் பகுதிகள் , பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. மேலும் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அம்மா பேட்டையில் உள்ள ஈஸ்வரன் கோவிலில், ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18-ஆம் பெருக்கையொட்டி, நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் , அம்மாபேட்டை காவிரி ஆற்றில் புனித நீராடி 

ஈஸ்வரனை வணங்கி செல்வது வழக்கம். இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் விதாமாக, தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் அம்மாபேட்டை காவிரி ஆறு பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

திருச்சி காவிரியில், ஆடிப்பெருக்கு விழா கொரோனா ஊரடங்கு காரணமாக களையிழந்து காணப்பட்டது. ஆண்டுதோறும் ஆடி பதினெட்டாம் நாளன்று, பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி காவிரி கரையின் இருபுறமும் மங்கல பொருட்கள் வைத்து வழிபடுவது வழக்கம். ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் ஒன்றுக்கூட தடை விதிக்கப்பட்டுள்ளதால் கரையோரங்கள் வெறிச்சோடியது. மேலும் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

கோவை ஆனைமலை பகுதியில் ஊரடங்கை மீறி ஆடிப்பெருக்கு விழாவை பொதுமக்கள் கொண்டாடினர். ஆண்டுதோறும் தீபாவளி திருநாளில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதுபோல், ஆடிப்பெருக்கு நாளில் பாப்பாட்டான் வெடித்து மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். இன்று முழு ஊரடங்கு அமலில் இருந்தபோதும், அதனை கடைபிடிக்காமல், பொதுமக்கள், பாப்பாட்டான் வாங்கி வெடித்தனர்.

இதனிடையே, மயிலாடுதுறையில் ஊரடங்கை மீறி ஏராளமானோர் காவிரி துலாக்கட்டத்தில் ஒன்று கூடி ஆடிப்பெருக்கை கொண்டாடினர். காவிரி ஆற்றில் புனித நீராடிய புதுமண தம்பதிகள், படையலிட்டும், மஞ்சள் கயிறு மாற்றியும் காவிரி தாயை வழிபட்டனர்.

இதேபோல், கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த வெள்ளாறு, மணிமுக்தாறு ஆற்றங்கரைகளில் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டது. அங்கு வந்திருந்த புதுமணத் தம்பதிகள் ஏராளமானோர் சமூக இடைவெளியை பின்பற்றி ஆடிப்பெருக்கை கொண்டாடினர்.

Comment

Successfully posted