கொரோனாவால், உலக அளவில் பலி எண்ணிக்கை 14,611 ஆக அதிகரிப்பு

Mar 23, 2020 08:38 AM 734

உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் வேகமாக பரவி வரும் இத்தாலியில் ஒரே நாளில் 651 பேர் உயிரிழந்ததால் அந்நாட்டில் மட்டும் 5 ஆயிரத்து 476 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலியானோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது. வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதுவரை 192 நாடுகளுக்கும் மேல் வைரஸ் பரவியுள்ள நிலையில், 3 லட்சத்து 35 ஆயிரத்து 403 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக அளவில், கொரோனாவின் தாயகமான சீனா, கடுமையாக பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது. சீனாவில் இதுவரை 81 ஆயிரத்து 054 பேர் பாதிக்கபட்டுள்ளதாகவும், வைரஸ் தாக்கத்திலிருந்து 72 ஆயிரத்து, 440பேர் குணமடைந்துள்ளதாகவும் 3 ஆயிரத்து 261 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சீனாவுக்கு அடுத்த படியாக கொரோனாவால் இத்தாலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 5 ஆயிரத்து 560 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை 59 ஆயிரத்து 138 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் மட்டும் 651க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 5 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல் அமெரிக்காவில் கொரோனாவால் இதுவரை 414 பேர் உயிரிழந்துள்ள நிலையில்  8ஆயிரத்து 149 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஸ்பெயினில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து603 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல், ஜெர்மனியில் கொரோனாவால் இதுவரை 94 பேரும், ஈரானில் 1685 பேரும் உயிரிழந்துள்ளனர். ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்து 685 ஆக அதிகரித்துள்ளது.

உலக நாடுகள் எடுத்து வரும் தீவிர நடவடிக்கை காரணமாக வைரஸின் தாக்கத்திலிருந்து மீண்டுள்ளவர்கள் எண்ணிக்கை 97 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது. இருந்த போதிலும் நோயின் தாக்கத்தை உணர்ந்து அனைத்து நாடுகளும் கடும் கட்டுப்பாட்டை விதித்து வருகின்றன.

Comment

Successfully posted