மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை

Jun 28, 2021 05:13 PM 719

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் மனநலம் பாதித்தவர்களுக்கான மாநில அரசின் மனநல கொள்கையை அமல்படுத்தக் கோரியும், வீடில்லா மனநலம் பாதித்தவர்களை மீட்டு, அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது போன்ற மருத்துவ உதவிகளை வழங்கக் கோரியும், தொண்டு நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் நடத்தியதைப் போல், மனநலம் பாதித்தவர்களுக்கும் முன்னுரிமை அளித்து, சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர்.

குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, தெருக்களில் திரியும் மனநலம் பாதித்தவர்களையும் உரிய முறையில் கவனிக்க வேண்டும் என்றும், பூந்தமல்லியில் உள்ள மறுவாழ்வு மையத்தை பராமரித்து, அந்த வளாகத்தை தடுப்பூசி முகாம் நடத்த பயன்படுத்த வேண்டும் என்பதும் நீதிபதிகள் உத்தரவு. இது தொடர்பாக நான்கு வாரங்களில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஐந்து வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பலர் கொரோனாவால் உறவினர்களையும், நண்பர்களையும் இழந்துள்ளதாகவும், வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் தெரிவித்த நீதிபதிகள், அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்க வேண்டிய அவசியம் உள்ளதாக தெரிவித்தனர்.

Comment

Successfully posted