அசுர வேகத்தில் கொரோனா வைரஸ்: என்ன வேகத்தில் பரவுகிறது கொரோனா?

Mar 24, 2020 07:06 PM 1767

உலகெங்கும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. என்ன வேகத்தில் பரவுகிறது கொரோனா? சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் சிலரை மட்டும் தாக்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 195 நாடுகளில் பரவியுள்ளது. உலக வரலாற்றில் எந்த ஒரு நுண்ணுயிரியும் பரவாத வேகம் இது. கொரோனா வைரஸ்சின் இந்த அதிவேகப் பரவலுக்கு மனிதர்கள் தான் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பதுதான் கசக்கும் உண்மையாக உள்ளது.
 
கொரோனா வைரஸ் இதுவரை 3 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்குப் பரவி, அவர்களில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரைக் கொன்றும் உள்ளது. 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.  இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் ஜெப்ரேயிசஸ் சமீபத்தில் கூறிய கருத்துகள் நிலவரத்தின் வீரியத்தை இன்னும் தெளிவாக விளக்கக்கூடியனவாக உள்ளன.
 
கொரோனா வைரஸ் முதல் 1 லட்சம் பேருக்கு பரவ 67 நாட்களை எடுத்துக் கொண்டது. ஆனால் அடுத்த 11 நாட்களில் 2 லட்சம் பேருக்கு அது பரவிவிட்டது. அடுத்த நான்கே நாளில் கொரோனா இன்னும் ஒரு லட்சம் பேருக்குக் கூடுதலாகப் பரவி உள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவது தெளிவாகத் தெரிகின்றது என்று கொரோனாவைப் பற்றி கூறி உள்ளார் ஜெப்ரேயிசஸ்.

கொரோனா வைரஸ் பரவலை ஆரம்ப நிலையில் கட்டுப்படுத்தவில்லை என்றால், அதன் பின்னர் அதனைக் கட்டுப்படுத்துவது மிக மிகக் கடினமாகிவிடும் உதாரணமாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட இத்தாலி, ஈரான் நாடுகளில் முதல் 5 வாரங்களில் கொரோனா பரவிய வேகத்தை பார்த்தால் அதன் வீரியம் தெரியும்.

இத்தாலியில் கொரோனா தொற்று பரவிய முதல் வாரத்தில் 3 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 2ஆவது வாரத்தில் இது 152ஆக உயர்ந்தது. 3-வது வாரத்தில் தொற்று 1,036 பேரிடம் கண்டறியப்பட்டது. 4-வது வாரத்தில் தொற்று பரவியவர்களின் எண்னிக்கை 6,362 ஆக மளமளவென உயர்ந்தது. 5ஆவது வாரத்தில் தொற்று 21,157 பேரிடம் பரவி இத்தாலியை நிலை குலைய வைத்தது.
 
ஈரானில் கொரோனா பரவிய முதல் வாரத்தில் வெறும் 2 பேருக்கு மட்டுமே தொற்று காணப்பட்டது. 2-வது வாரத்தில் அது 43ஆக உயர்ந்தது. 3 ஆவது வாரத்தில் அது 245 ஆனது. 4ஆவது வாரத்தில் திடீரென கொரோனா தொற்று 4,747 பேருக்கு பரவியது. 5 ஆவது வாரத்தில் தொற்று 12,729 பேருக்குப் பரவி விட்டது. இதன் பின்னர் ஈரானால் கொரோனாவுக்கு எதிராகப் போராட முடியவில்லை
 
இதனால்தான் இந்திய அரசும், தமிழக அரசும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிய உடனாகவே உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள், ஊரடங்கு  உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்கள். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அரசுகளுக்கு உதவ வேண்டியது நமது கடமை மட்டுமின்றி, மனித இனத்திற்கே நாம் செய்யும் மகதான உதவியும் ஆகும்.
 
 

Comment

Successfully posted

Super User

நாங்களும் ஒத்துழைப்பு தருகின்றோம்


Super User

861072956