தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை - முதலமைச்சர் திட்டவட்டம்

Jul 07, 2020 10:24 PM 638

தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்படாத வகையில் எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு இணையான சிகிச்சையுடன், கிங் இன்ஸ்ட்டியூட்டில் கொரோனா சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில், 750 படுக்கை வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 300 படுக்கைகள் பிரிவு, தீவிர சிகிச்சைக்கான 60 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு பிரிவு போன்ற கொரோனா சிகிச்சை பிரிவுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

மருத்துவமனையைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்படாத வகையில் யோகா பயிற்சி உள்ளிட்ட உயர் சிகிச்சை வசதிகளுடன், எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையாக இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் 95 பரிசோதனை நிலையங்கள் மூலம் நாளொன்றுக்கு 35 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார். ஊரடங்கின் மூலம் சென்னை மாநகரத்தில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்திருப்பதாகவும், முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். தமிழகத்தில் சமூக பரவல் ஏற்படவில்லை என மீண்டும் திட்டவட்டமாகக் அவர் கூறினார்.

காய்ச்சல் முகாம்கள் மூலம்,10 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், சென்னை மாநகராட்சியில் வீடு வீடாக காய்ச்சல் சளி இருமல் நோய்அறிகுறி கண்டறியப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, மக்களின் வாழ்வாதாரத்தை காக்க ஊரடங்கு தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஊரடங்கு காலத்தில் ஒத்துழைப்பு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comment

Successfully posted