கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனையை மீண்டும் தொடங்க தயார் - சீரம் நிறுவனம்

Sep 13, 2020 12:29 PM 4182

இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியதும், இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை மீண்டும் தொடங்கும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து காக்க ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்தது. பிரிட்டனின் ஆஸ்டிராசெனிகா (ASTRAZENECA) நிறுவனத்துடன், இந்தியாவின் சீரம் நிறுவனம் இணைந்து மருந்து தயாரிப்பில் ஈடுபட்டது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி வழங்கிய நிலையில், சென்னை, புனே உள்ளிட்ட 17 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டாவது கட்டமாக செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வந்தது. தடுப்பூசி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரிட்டனில் தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு சீரம் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனால், கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனையை தற்காலிகமாக நிறுத்துவதாக சீரம் நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில், பிரிட்டனில் தடுப்பூசி பரிசோதனைக்கு ஆக்ஸ்போர்ட்டு பல்கலைக்கழகம் மீண்டும் அனுமதி அளித்துள்ளது. இதனால், இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted