இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது - நீதிபதிகள் வேதனை!

Oct 09, 2020 02:21 PM 330

இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுவதாகவும், கிரிக்கெட் மட்டும் தான் விளையாட்டு என்ற எண்ணத்தை இளைஞர்களிடம் செயற்கையான மாய பிம்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சிறப்புத் திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து சலுகைகளையும், ஒரே மாதிரி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மதுரை மாவட்டம் துவரிமானை சேர்ந்த மதுரேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனிதனின் ஆரோக்கியத்தை காத்திடும் பல வகையான விளையாட்டுகள் இந்தியாவில் உள்ளதாகவும், கிரிக்கெட் விளையாட்டிற்கு போல், பிற விளையாட்டுகளுக்கும் உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறினர். கிரிக்கெட் விளையாட்டிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், மனு மீதான விசாரணையை அக்டோபர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Comment

Successfully posted