மீன் சந்தைகளில் இன்றே அலைமோதும் கூட்டம்

May 07, 2021 01:37 PM 842

தமிழகத்தில் 2 நாட்களுக்கு இறைச்சி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், மீன் சந்தைகளுக்கு பொதுமக்கள் இன்றே படையெடுத்தனர்.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலை 3 மணி முதல் மீன் விற்பனை துவங்கியது. மீன்பிடி தடை காலம் என்பதால் மீனவர்கள் சிறிய படகுகளில் சென்று மீன்களை
பிடித்து வந்தனர். வவ்வால், திருக்கை, மாவலாசி, சூரை உள்ளிட்ட ஏராளமான மீன்கள் அதிக விலைக்கு விற்பனையானது. மீன்பிடி துறைமுகத்தில் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுத்து, இரு இடங்களில் தடுப்பு அமைத்து, அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டும் போலீசார் அனுமதி வழங்கினர். நேரம் செல்ல செல்ல பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து, பாதுகாப்பான இடைவெளி காற்றில் பறந்ததால், தொற்று பரவும் சூழல் ஏற்பட்டது.

இதேபோல், சென்னை சிந்தாதரிப்பேட்டை மீன் சந்தையில் ஏராளமானோர் கூடினர். பொதுமக்கள் பாதுகாப்பு இடைவெளியை கடைப்பிடிக்க தவறியதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த மீன் விற்பனைக்கு கூடுதல் நேரம் வழங்க வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் துறைமுகம் மீன்பிடி சந்தையில் மீன்களை வாங்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர். மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில் வரத்து குறைந்துள்ள நிலையில், மீன்கள் விலை அதிகரித்து விற்பனையானது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு காவல்துறை வலியுறுத்தினாலும், பொதுமக்கள் பாதுகாப்பு இடைவெளியை பின்பற்றாமலும், சிலர் முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக செயல்பட்டனர்.

 

Comment

Successfully posted