தலைநகர் டெல்லியில் அமலுக்கு வந்த ஊரடங்கு தளர்வுகள்

Jun 07, 2021 06:08 PM 2350

டெல்லியில் தொற்று பாதிப்பு குறைந்ததால், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வணிக வளாகங்கள், சந்தைகள் இன்று முதல் சுழற்சி முறையில் செயல்பட தொடங்கின. 50 சதவீத பயணிகளுடன் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், டெல்லியில் உள்ள முக்கிய சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

டெல்லியில் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வருகை அதிகரித்துள்ளது. டெல்லியில் தளர்வு காரணமாக கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊரடங்கால் சொந்த மாநிலங்களுக்கு சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் டெல்லியை நோக்கி படையெடுத்துள்ளனர். இதனால், பேருந்து நிலையங்களில் மக்களின் கூட்டம் அதிகம் காணப்பட்டது. முன்னதாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் கருதியே தொழிற்சாலை மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி வழங்கியதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் அளித்திருந்தார்.

இதே போல், மகாராஷ்டிராவில் ஐந்து நிலைகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வு காரணமாக பேருந்து சேவை தொடங்கின. முதற்கட்டமாக உள்ளூர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். அனைத்து கடைகளும், உணவகங்களும் திறக்கப்பட்டன.

 

Comment

Successfully posted