தீவிர புயலாக மாறியுள்ள யாஸ் ; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

May 25, 2021 09:05 PM 783

தீவிர புயலாக மாறியுள்ள யாஸ், 26ம் தேதி ஒடிசா - மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் யாஸ் புயலாக மாறியது. இதனைத் தொடர்ந்து, தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது அதிதீவிர புயலாக மேலும் வலுவடைந்து, வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, பாராதீப் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாகர் தீவுக்கு இடையே 26ம் தேதி கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 950-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள், ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

16 விமானங்கள் மற்றும் 26 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒடிசா மாநிலம் பாரதீப் துறைமுகத்தில் இருந்து அனைத்து கப்பல்களும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நங்கூரமிடப்பட்டுள்ளன.

பாரதீப் துறைமுகத்தின் அனைத்து அன்றாடப் பணிகளும் நிறுத்தப்பட்டு, துறைமுகம் மூடப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் கடற்கரையோர மாவட்டமான மிட்னாபூரில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒலிப்பெருக்கி மூலம் புயல் குறித்து எச்சரித்து, பொதுமக்களை நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்றனர்.

மாநிலத்தின் கடற்கரையோர பகுதிகள் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

அரக்கோணத்தில் இருந்தும் தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 5 குழு உறுப்பினர்கள் மேற்கு வங்க மாநிலத்திற்கு விரைந்துள்ளனர்.

25 நபர்கள் கொண்ட குழு என்ற அடிப்படையில், 125 வீரர்கள் அரக்கோணம் ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் இருந்து தனி விமானம் மூலமாக மேற்கு வங்கம் புறப்பட்டு சென்றனர்.

புயல் கரையை கடக்கவுள்ள சூழலில், அனைத்து துறைகளும் மிகுந்த விழிப்போடு இருக்க வேண்டுமென மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

புயலின் நிலை குறித்தும் கட்டுப்பாடு அறையின் செயல்பாடு குறித்தும் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் காணொலியில் ஆலோசித்தார்.

Comment

Successfully posted