தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் கைது!

May 23, 2020 01:21 PM 1139

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் கைது செய்யப்பட்டார்.சென்னை அன்பகத்தில், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார். நீதிபதிகள் நியமனம் தொடர்பாக அவர் பேசிய கருத்துக்கள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண்குமார் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில் ஆர்.எஸ்.பாரதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
குறிப்பிடப்பட்டிருந்தது. புகாரின் அடிப்படையில், ஆர்.எஸ்.பாரதி மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தில் 2 பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில், சென்னை ஆலந்தூரில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆர்.எஸ். பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, எழும்பூர் மத்தியக் குற்றப்பிரிவு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதனிடையே, இடைக்கால ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.

Comment

Successfully posted