சுமார் 10 டன் தேங்காய் ஏற்றிவந்த லாரியை கடத்திய திமுகவினர்

Aug 03, 2019 07:09 PM 824

வணிக நிறுவனங்களை அடித்து நொறுக்குவது, பெண்களை அடிப்பது என தொடர்ந்து அராஜக செயல்களில் ஈடுபடும் திமுகவினர், தற்போது கடத்தல் தொழிலும் இறங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது...

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் மனோகர், வயது 30. இவர் பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு, தேங்காய் லோடு ஏற்றிச் செல்லும் வேலையை வழக்கமாக செய்துவருகிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ந் தேதி மனோகர் கோவைக்கு ”10½ டன்” தேங்காய் லோடு ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சியை அடுத்துள்ள மீனாட்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார்.

இரவு 9.30 மணி அளவில் நெகமம் அருகே சென்ற போது ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட மர்மக் கும்பல் லாரியை வழி மறித்து ஆயுதங்களை காட்டி மனோகரனை மிரட்டி, தாங்கள் வந்த காரிலேயே லாரி ஓட்டுநர் மனோகரனை குண்டுக்கட்டாக ஏற்றியுள்ளனர். மேலும்10½ டன் தேங்காயுடன் வந்த லாரியையும் கடத்தினர். அவினாசி அருகே, லாரி ஓட்டுநர் மனோகரை, இருட்டான பகுதியில் தள்ளி விட்டு, லாரியுடன் தப்பி சென்றனர் அந்த 6 பேர் கொண்ட கடத்தல் கும்பல்.

எப்படியோ உயிர் பிழைத்தோம் என்று லாரி ஓட்டுநர் மனோகரன் அருகில் இருந்த பெட்ரோல் பங்கிற்கு சென்று சென்னையில் உள்ள லாரி உரிமையாளருக்கு தேங்காய் கடத்தல் குறித்து தகவல் கொடுத்துள்ளார். அதையடுத்து காவல்துறைக்கும் புகார் கொடுக்கப்பட்டது.

கடத்தி செல்லப்பட்ட லாரியில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டிருந்தது. அதன் மூலம் நெகமம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் லாரி பல்லடம்-திருச்சி ரோட்டில் உள்ள ஒரு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். லாரியை கைப்பற்றி, குற்ற சம்வதில் தொடர்புடைய 6 பேரை கைது செய்து விசாரித்த பிறகு தான், காவல்துறையினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

திருட்டில் ஈடுபட்ட 6 பேரில் இருவர் திமுகவில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் என்று தெரியவர அதிர்ச்சியடைந்துள்ளனர் காவல்துறையினர்.

யார் அந்த 6 கடத்தல் மன்னர்கள்?

கோவில்பாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ்குமார்.. வயது 25, ஹரிபிரசாத்.. வயது 26, பொள்ளாச்சியை சேர்ந்த கோகுல்.. வயது 25, திவான்சாபுதூர் மணிகண்டன்.. வயது 23, மீனாட்சிபுரத்தை சேர்ந்த அப்துல்ரகுமான்.. வயது 23, சந்தோஷ்.. வயது 20.

இதில் கடத்தலில் ஈடுபட்ட கோகுல் குமார் மற்றும் மணிகண்டன் இருவரும் திமுக தலைவர் ஸ்டாலினுடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியிருக்கின்றன. இதிலிருந்தே தில்லு முல்லு கழகம் என்று விமர்சிக்கப்படும் திமுகவில் எப்படி கழக உடன்பிறப்புகளை கட்டுக்கோப்பாய் வளர்க்கிறார்கள் என்பது தெரியவருகிறது என்றும் சொல்கிறார்கள் பொதுமக்கள்.

கைது செய்யப்படவர்களில், கோகுல் பொள்ளாச்சி 18வது வார்டு மாணவரணி அமைப்பு செயலாளராக உள்ளார். மேலும் கோகுல் மற்றும் மணிகண்டன் இருவரும் திமுகவின் பொள்ளாச்சி நகர மாணவரணி அமைப்பு செயலாளர் மணிமாறனுக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த மணிமாறனுடைய தந்தை தென்றல் செல்வராஜ் திமுகவில் கோவை புறநகர் மாவட்ட செயலாளராக உள்ளவர். திமுகவின் மாணவரணி அமைப்பு செயலாளர் மணிமாறன் சொல்லும் கட்டப்பஞ்சாயத்துகளையும், கட்டளைகளை செய்து முடிப்பவர்களாகவும் இந்த கடத்தல் கும்பல் செயல்படுவதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு கடந்த மே மாதம் 30 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது, அப்போது விசாரித்த நீதிபதிகள் மீண்டும் இந்த வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். தற்போது பொள்ளாச்சி துணை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இப்படி திமுகவை சுற்றி முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள், அதற்கு கீழே திமுகவில் இருக்கும் ஆட்களை பயன்படுத்தி இது போன்ற கடத்தல் சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற தகவல், கோவை மக்களிடையே திமுக மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல குற்ற செயல்களில் ஈடுபட்டுவந்த இந்த திமுக கடத்தல் கும்பல் தற்போது டன் கணக்கில் தேங்காய் திருடி நீதிமன்ற படி ஏறி இறங்குகிறது என்று சாடுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

வணிக நிறுவனங்களை அடித்து நொறுக்குவது, பெண்களை அடிப்பது என அராஜகம் செய்து திமுகவினர் ஏற்கனவே சிக்கி வரும் நிலையில் தற்போது நீதிமன்றம் மூலம் தேடும் அளவிற்கு குற்றச்செயல்களில் பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பதாக சாடுகின்றனர் பொதுமக்கள்.

Comment

Successfully posted