கொங்கு மண்டலத்தைக் கண்டு அஞ்சும் திமுக

Mar 15, 2019 07:35 PM 2693

திமுக வெளியிட்டுள்ள தொகுதிகள் பட்டியலில், கொங்கு மண்டலத்தைக் கண்டு திமுக அச்சப்படுவது தெளிவாகத் தெரிகின்றது. திமுகவின் தொகுதிப் பட்டியலில் பொள்ளாச்சியைத் தவிர கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு தொகுதி கூட இல்லை என்பதே இதற்கு சான்று என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். எதிர்வரும் மக்களவைத் தேர்தலைக் கண்டு திமுக அச்சமும் கலக்கமும் அடைந்துள்ளதையே அதன் தேர்தல் தொடர்பான செயல்பாடுகள் காட்டுகின்றன.

ஆட்சியில் இல்லாத, மக்களவையில் மொத்தம் 50 மக்களவை உறுப்பினர்களைக் கூடக் கொண்டிருக்காத காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் 10 இடங்கள் ஒதுக்கப்பட்டபோதே திமுகவின் அச்சம் கவனிக்கப்பட்டது. இப்போது வெளியாகி உள்ள திமுக கட்சியின் தொகுதிப் பட்டியல் அந்த அச்சத்தை உறுதிப்படுத்தி உள்ளது.

கொங்கு மண்டலத்தில் அதிமுக முழு வலிமையோடு உள்ள நிலையில், பாஜகவுடனான அதன் கூட்டணி கூடுதல் வலிமையை சேர்த்துள்ளது. அதனால் தான் கொங்கு மண்டலத்தில் போட்டியிட்டு தோல்வி அடைய திமுக விரும்பவில்லை. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் திமுக கூறும் குற்றச்சாட்டுகளை மக்கள் நம்புவார்கள் - என்ற கணக்கின் அடிப்படையில்தான் அந்தத் தொகுதியில் திமுக போட்டியிடுகின்றது.

இல்லை என்றால் அங்கும் திமுக போட்டிக்கு வந்திருக்காது. ஆனால் திமுகவின் பட்டியலில் இப்படியாக பொள்ளாச்சி மட்டும் இடம்பெற்று இருப்பது திமுகவின் சதியை அதுவே ஏற்றுக் கொள்வதைப் போன்றதாகவே கொங்கு மக்களுக்குக் காட்சியளிக்கின்றது.

திமுகவின் இந்த தொகுதிப்பட்டியல், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவே கொங்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்துள்ளது என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Comment

Successfully posted