கஜா புயல்: ஓராண்டிற்குள் இயல்பு நிலைக்கு திரும்பிய டெல்டா மாவட்டங்கள்

Nov 16, 2019 11:28 AM 126

கடந்த ஆண்டு இதே தினம், நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கரையை கடந்த கஜா புயல், டெல்டா மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழக அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கைகளால், டெல்டா மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்பின.

கடந்த ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி அதிகாலையில் 110 கி.மீ வேகத்தில் கோரதாண்டவம் ஆடிய கஜா புயல், டெல்டா மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.

கஜா புயல் வருவதை முன்கூட்டியே கனித்த வானிலை ஆய்வு மையத்தின் தகவலாலும் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையாலும் பெரும்பாலான உயிர்சேதங்கள் தடுக்கப்பட்டன. ஆனாலும் இயற்கையின் கோரத்தாண்டவத்தால் விவசாய நிலங்கள், மீனவ உபகரணங்கள், மின்கம்பங்கள், கால்நடைகள் என பலவும் சிக்கி சீர்குலைந்தன.

இவ்வாறு சீர்குலைந்த டெல்டா மாவட்டங்கள் உயிர்த்தெழ பல ஆண்டுகள் ஆகும் என்று பல தரப்பினரால் கூறப்பட்டு வந்த நிலையில் அரசின் அதிரடி நடவடிக்கைகளால் ஒரே ஆண்டில் இயல்பு நிலைக்கு திரும்பியது டெல்டா மாவட்டங்கள்.

புயலால் பெருமளவு பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 18 ஆயிரம் மட்டுமே வழங்க முடியும் என்ற நிலையை மாற்றி ஹெக்டேருக்கு 92 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கி விவசாயிகளின் இன்னலை துடைத்த அரசாக தமிழக அரசு விளங்குகிறது.

நெற்பயிற்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு ஹெக்டேருக்கு 13 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்பட்டது. இதேபோல கரும்பு, வாழை, காய்கறிகள், மலர்கள் போன்ற பாசன பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 13 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்கியதோடு மறுசாகுபடிக்கும் 50% மானியமாக வழங்கப்பட்டது.

பணப்பயிர்களான பலா, முந்திரி, வெற்றிலைக்கொடி, மிளகு உள்ளிட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 18 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது.

புயலால் சாய்ந்த மரங்களை அகற்றிட மரம் ஒன்றிற்கு 500 வீதம் 800 மரங்களுக்கு 4 லட்சம் வரை விவசாயிகளுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டது.

சொட்டுநீர் பாசனம் முறைப்படி பாசன வசதி பெற சிறு, குறு, விவசாயிகளுக்கு 100% மாநியமும், இதர விவசாயிகளுக்கு 75% மாநியம் என விவசாயம் செழித்தோங்க ஒட்டுமொத்தமாக 775.30 கோடி ரூபாய் வேளாண் துறைக்கு நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.

இதே போல மீனவ கிராமங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்ய 46.88 கோடி அளவுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டன. இதில் புயலால் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு 5 லட்சம் ரூபாயும், பகுதி சேதத்திற்கு 3 லட்சம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல முழு சேதமடைந்த FRP படகுகள் மற்றுன் வலைகளுக்கு தலா ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், பகுதி சேதமடைந்த FRP படகுகள் மற்றும் வலைகளுக்கு 30 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ஓட்டுமொத்த மீன்வளத்துறைக்கும் சேர்த்து 46.88 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட குடிசை மற்றும் ஓட்டு வீடுகளுக்கு 401.49 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கியதோடு வீடு இழந்தோருக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தருவதற்கான அறிவிப்பு வழங்கப்பட்டு அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதே போல மின்சாரத்துறைக்கு 450 கோடி நிதியும், பொதுப்பணித்துறை மற்றும் நெடுச்சாலைத்துறைக்கு ரூ.35 கோடியும், பேரூராட்சி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறைக்கு 35 கோடி ரூபாய் என ஒட்டுமொத்தமாக 2,395 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டதோடு பணிகளை அவ்வபோது கண்கானித்து கூட்டங்கள் நடத்தியதால் பணிகள் வேகமெடுத்து இன்று
டெல்டா மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.

Comment

Successfully posted