அழிந்தாலும் அழியா நினைவுச்சின்னங்களை கொண்ட தனுஷ்கோடியின் சிறப்பு

May 16, 2019 04:37 PM 48

இந்தியாவின் கடைகோடி சுற்றுலாத்தலமான தனுஷ்கோடியில் புனித தலமட்டுமல்லாது சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. தனுஷ்கோடியின் சிறப்புகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவின் தென் கோடியில் உள்ள ஊர் தனுஷ்கோடி. பாம்பனுக்கு தென் கிழக்கே இராமேஸ்வரத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. முந்தைய காலங்களில் இலங்கையுடன் கடல்வாணிபம் புரிய தனுஷ்கோடி சிறந்த துறைமுகமாக விளங்கியது. இங்கு வங்கக் கடலும், இந்தியப் பெருங்கடலும் கூடுமிடம் தற்போது அரிச்சல்முனை கடற்கரையாக அழைக்கப்பட்டு புகழ் பெற்று விளங்குகிறது. இங்கு குளித்தால்தான் காசி யாத்திரை முடிவுறுவதாக இந்துக்கள் நம்புகின்றனர்.

கடந்த 1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது.

புயல் வந்து புரட்டிப் போட்டதன் அடையாளமாக இன்றும் மிச்சமிருப்பது சிதிலமடைந்த ஒரு தேவாலயமும், சில கட்டடங்களும் மட்டுமே. இருப்பினும் தனுஷ்கோடியில் இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வதால்,சங்கு வியாபாரம், புகைப்படம் எடுத்தல் மற்றும் சிறுசிறு வியாபாரம் மூலம் வேலைவாய்ப்பும் வருமானமும் கிடைத்துள்ளதாக உள்ளூர்வாசிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

ராமேஸ்வரம் பகுதி வெறும் புனித தளம் மட்டுமல்ல ,இது ஒரு சுற்றுலாத்தளமும் கூட என இங்கு வந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் என தெரிவிக்கின்றனர் பெங்களூருவில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள்.

நாளொன்றுக்கு ஐந்தாயிரம் முதல் ஏழாயிரம் பேர் வரை சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் இந்தப்பகுதியில் வெயில் மற்றும் மழைக்கு ஒதுங்கி நிற்பதற்கான பந்தல் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

அழிந்தாலும் அழியா நினைவுச்சின்னங்களை கொண்டு சுற்றுலாப்பயணிகளுக்கு மகிழ்ச்சியை தரும் இவ்விடம் மீண்டும் புத்துயிர் பெற்று சிறந்து விளங்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் ஆகும்...

Comment

Successfully posted